கீழ்வேளூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் அதிகாரிகள் ஆய்வு


கீழ்வேளூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 26 March 2019 4:15 AM IST (Updated: 26 March 2019 12:55 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

கீழ்வேளூர்,

நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள ஆயிரத்து 93 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் கீழ்வேளூரில் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நல அலுவலரும், நாடாளுமன்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான பாபுராபர்ட் தலைமை தாங்கினார். கீழ்வேளூர் தாசில்தார் கபிலன், தேர்தல் துணை தாசில்தார் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், கீழ்வேளூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாருமான அமுதவிஜயரங்கன் கலந்துகொண்டு, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.

அப்போது கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 203 வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் மாதிரி படிவங்களை வழங்கி அதனை எவ்வாறு பூர்த்தி செய்வது குறித்தும், புதிதாக நடைமுறைக்கு வந்துள்ள யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வாக்காளர்கள் அறிந்தும் கொள்ளும் வகையிலும் அவர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் மாதிரி எந்திரத்தின் மூலம் அலுவலர்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தார்.

இந்த முகாமை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சந்தோஷ்குமார், நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதே போல நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் வேதாரண்யம் பாரதிதாசன் கல்லூரியில் நடந்தது. முகாமில் வேதாரண்யம் தாலுகாவில் உள்ள 227 பூத்திலும் பணியாற்ற செல்லும் வாக்குச்சாவடி அலுவலர்கள் 1089 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் உதவி தேர்தல் அலுவலர் பூங்கொடி, தேர்தல் துணை தாசில்தார் ஜெயசீலன், ஊராட்சி ஒன்றிய மேலாளர் பக்கிரிசாமி, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் சுப்பிரமணியன், தாமோதரன், வேதாரண்யம் தாசில்தார் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். பின்னர் மின்னணு வாக்கு எந்திரங்கள் பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story