அடமானத்துக்கு வாங்கிய வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் சொந்தமாக்கி விற்பனை மோசடி கும்பல் கைது
அடமானத்துக்கு வாங்கிய வீடுகளை போலி ஆவணங்கள் மூலம் சொந்தமாக்கி விற்பனை செய்து ஒரு கும்பல் கோடிக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலை சேர்ந்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை சிட்லப்பாக்கத்தை சேர்ந்தவர் சதீஷ் குமார்(வயது 36). இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
2018-ம் ஆண்டு எனது சொந்த தேவைக்காக, எனக்கு சொந்தமான வீட்டை பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வந்த சுகன்யா(41), டெல்லிபாபு (40) ஆகியோரிடம் ரூ.6 லட்சத்துக்கு அடமானம் வைத்தேன். அந்த அடமானத் தொகைக்கு மாதந்தோறும் வட்டியும் செலுத்தி வந்தேன்.
இந்த நிலையில், அடமானம் வைத்த எனது வீட்டை போலி ஆவணங்கள் மூலம் சுகன்யாவும், டெல்லிபாபுவும் தங்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டனர். பின்னர் அந்த வீட்டை வியாசர்பாடியை சேர்ந்த ஜாஹூபர் அலி(34) என்பவருக்கு விற்பனை செய்தது போல, போலி ஆவணங்களை தயாரித்து, அந்த ஆவணங்கள் மூலம் எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.1.31 கோடிக்கு அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளனர்.
இந்த பணத்தை சுகன்யா, டெல்லிபாபு, ஜாஹூபர் அலி மற்றும் பெங்களூரூவை சேர்ந்த விநாயகா ஆச்சாரியா(43) ஆகியோர் சேர்ந்து பங்கு போட்டுள்ளனர். அவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட்டுத்தரும்படி வேண்டுகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த புகார் மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கோகுலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். மோசடியில் ஈடுபட்ட சுகன்யா, டெல்லிபாபு, ஜாஹூபர் அலி, விநாயகா ஆச்சாரியா ஆகிய 4 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் இதுபோல், 10-க்கும் மேற்பட்டவர்களிடம் வீடுகளை அடமானம் வாங்கி, போலி ஆவணங்கள் மூலம் அபகரித்து, ரூ.10 கோடி வரை சுருட்டியுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
Related Tags :
Next Story