சொகுசு பஸ், காரில் கொண்டு வரப்பட்ட சில்வர் பாத்திரம், வேட்டி–சேலைகள் பறிமுதல் காலாப்பட்டு போலீசார் அதிரடி
தனியார் சொகுசு பஸ் மற்றும் காரில் கொண்டு வரப்பட்ட சில்வர் பாத்திரங்கள், வேட்டி– சேலைகளை காலாப்பட்டு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
காலாப்பட்டு,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் புதுவை மாநில எல்லையில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு பணியாற்றும் தேர்தல் அலுவலர், போலீசார் கொண்ட குழுவினர் அந்த வழியாக வரும் வாகனங்களை நிறுத்தி இரவு பகலாக அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
இது தவிர பல இடங்களில் ஆங்காங்கே சோதனை நடத்தி, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் ரொக்கப்பணம் மற்றும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
புதுவை மாநில எல்லையான கனகசெட்டிக்குளத்தில் காலாப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹேமச்சந்திரன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் இருந்து புதுச்சேரி வழியாக திருவாரூருக்கு சென்ற தனியார் சொகுசு பஸ்சை வழிமறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த பஸ்சில் பயணிகள் உடமைகள் வைக்கும் இடத்தில் ஜூஸ் கடைகளில் பயன்படுத்தப்படும் 58 சில்வர் பாத்திரங்கள் இருந்தன.
இதுபற்றி விசாரித்தபோது, பாபநாசத்தை சேர்ந்த கனகராஜ் என்பவர் சில்வர் பாத்திரங்களை கொண்டு செல்வது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாததையடுத்து சில்வர் பாத்திரங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் வேட்டி – சேலைகள், துண்டுகள் இருந்தன. இதுபற்றி காரில் வந்தவரிடம் விசாரித்தபோது, திருவாரூரை சேர்ந்த தியாகராஜன் என்பதும், தனது புதுவீடு புகுமனை விழாவுக்கு வேட்டி– சேலை மற்றும் துண்டுகளை வாங்கிச்சென்றதும் தெரியவந்தது. ஆனால் உரிய ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அவை பறிமுதல் செய்யப்பட்டன.
வாகன சோதனையின்போது பறிமுதல் செய்த பொருட்களை தேர்தல் துறை அதிகாரியிடம் போலீசார் ஒப்படைத்தனர்.