மண்டபம் தோணித்துறை பகுதியில் மர்ம நபர்களால் கொல்லப்படும் மயில்கள்


மண்டபம் தோணித்துறை பகுதியில் மர்ம நபர்களால் கொல்லப்படும் மயில்கள்
x
தினத்தந்தி 26 March 2019 4:15 AM IST (Updated: 26 March 2019 2:06 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே மண்டபம் தோணித்துறை பகுதியில் மயில்கள் மர்ம நபர்களால் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டு கிடந்தன.

பனைக்குளம்,

ராமேசுவரம் அருகே மண்டபம் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியில் ஆயிரக்கணக்கான மயில்கள் வாழ்ந்து வருகின்றன. குறிப்பாக, மண்டபம் முதல் பாம்பன் ரெயில் பாலம் வரை உள்ள கடற்கரைப் பகுதி மற்றும் அதை சுற்றியுள்ள மரம், செடிகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் அதிக மயில்களை காண முடியும்.

இந்த நிலையில் மண்டபம் பகுதியில் கடந்த சில நாட்களாக மர்ம நபர்கள் மற்றும் போதை ஆசாமிகள் சிலர் மயில்களை வேட்டையாடி வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, மண்டபம் தோணித்துறை கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் அடர்த்தியாக வளர்ந்து நிற்கும் செடிகளின் நடுவே உள்ள நிழலில் அமர்ந்து மது அருந்த வரும் மர்ம நபர்கள் சிலர் அங்கு மரம், செடிகள் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஒய்வெடுக்கும் மயில்களை பிடித்து கொன்று அதன் இறக்கைகளை வெட்டி அந்த பகுதியிலேயே வீசி எறிந்துள்ளனர். இவ்வாறு பல மயில்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்பட்டுள்ளன.

அந்த பகுதியில் உள்ள மரம், செடிகளை சுற்றிலும் மயில்களின் இறக்கைகளும், தோகைகளும் வெட்டப்பட்ட நிலையில் சிதறி கிடக்கின்றன. நமது நாட்டின் தேசிய பறவையான மயிலை மனிதாபிமானம் இல்லாமல் மர்ம நபர்கள் வெட்டி கொன்று வீசி விட்டு சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எனவே மண்டபம் பகுதியில் கடற்கரை மற்றும் காடுகளில் சுற்றித்திரியும் மயில்களை பாதுகாக்க வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுப்பதோடு வேட்டையாடும் நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது பற்றி வனச்சரகர் சதீசிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- பொதுவாகவே எந்த ஒரு பறவைகளையும் வேட்டையாட கூடாது. பறவைகளை வேட்டையாடினால் அபராதம் விதிக்கப்படுவதோடு சிறை தண்டனையும் அனுபவிக்க நேரிடும். நமது நாட்டின் தேசிய பறவையான மயிலை வேட்டையாடினால் 3 வருடம் முதல் 7 வருடம் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story