நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி


நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
x
தினத்தந்தி 26 March 2019 3:30 AM IST (Updated: 26 March 2019 2:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

சேலம், 

நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 271 வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 271 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள் உள்பட மொத்தம் 1,027 பணியாளர்களுக்கு பயிற்சி சேலம் சின்னதிருப்பதி ஜெய்ராம் கல்லூரியில் நடந்தது. இந்த பயிற்சியை உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பயிற்சியில், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களின் பணிகள் மற்றும் பொறுப்புகள், வாக்குப்பதிவின்போது கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், கட்டுப்பாட்டு எந்திரங்கள், வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ‘விவிபேட்’ எந்திரம் ஆகியவற்றை கையாளும் முறைகள், வாக்குப்பதிவுக்கு முந்தைய மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதுதவிர, வாக்குப்பதிவு எந்திரங்களில் பழுது ஏற்படும்போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், மாநகராட்சி பொறியாளர் அசோகன், கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுந்தரராஜன், கவிதா, உதவி ஆணையாளர் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல், சேலம் வடக்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும், சேலம் மேற்கு சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பணியில் ஈடுபடும் 1,486 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, மேட்டூர், ஏற்காடு, ஆத்தூர், கெங்கவல்லி, சங்ககிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள 15 ஆயிரத்து 800 அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியானது, அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் நடந்தது.

Next Story