தேர்தலில் எந்தவித இடையூறு ஏற்பட்டாலும் தைரியமாக களப்பணியாற்றி வெற்றியை தேடித்தர வேண்டும் - அ.ம.மு.க. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் பேச்சு
தேர்தலில் எந்தவித இடையூறு ஏற்பட்டாலும் தைரியமாக களப்பணியாற்றி வெற்றியை தேடித்தர வேண்டும் என்று அ.ம.மு.க. கூட்டத்தில் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.சிவராஜ் பேசினார்.
விழுப்புரம்,
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் எஸ்.டி.பி.ஐ. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கரும்பு விவசாயிகள் சங்க சமுதாய கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அ.ம.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை தாங்கினார். மத்திய மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் அப்துல் கரீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளரும் கட்சியின் மாநில அமைப்பு செயலாளருமான எஸ்.சிவராஜ் கலந்துகொண்டு வேட்பாளர் கணபதியை அறிமுகம் செய்து வைத்து பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் பணியை ஒழுங்காக செய்பவர்தான் பதவியில் இருக்க வேண்டும். வேட்பாளர் கணபதி, மக்களுக்காக உழைக்கக்கூடியவர். அப்படிப்பட்ட அவரை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். ஊழல் நிறைந்த அ.தி.மு.க. அரசை மக்கள் ஏற்கவில்லை. அவர்களை மக்கள் ஒதுக்கி விட்டனர்.ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க. இயக்கத்தை மோடியிடம் அடமானம் வைத்துவிட்டனர். அதை அவர்களால் மீட்டெடுக்க முடியாது. அதை மீட்டெடுக்க கூடிய சக்தி டி.டி.வி. தினகரனிடம் மட்டுமே உள்ளது. இந்த ஆட்சி வீட்டுக்கு போவது உறுதி. இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிந்து சில மாதங்களில் நிச்சயமாக சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும். அந்த தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார். ஆட்சியை மட்டுமல்ல கட்சியையும் பிடிப்பார், இரட் டை இலை சின்னத்தையும் மீட்டெடுப்பார். இது 100 சதவீதம் உண்மை.
இந்தியாவிலேயே மிகப்பெரிய இயக்கமாக இருக்கும் அ.தி. மு.க. தற்போது பாழ்பட்டு கிடக்கிறது. 1½ கோடி தொண்டர்களும் இதனை சிந்தித்து பார்க்க வேண்டும். அரசியல் ரீதியாக நாங்கள் எதையும் சந்திக்க தயார். தேர்தலை சந்திக்க களப்பணிதான் முக்கியம். ஆகவே அனைவரும் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும். எந்தவித இடையூறு ஏற்பட்டாலும் தைரியமாக களப்பணியாற்றி வெற்றியை தேடித்தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாநில மீனவர் அணி இணை செயலாளர் கருணாநிதி, தகவல் தொழில்நுட்ப பணிக்குழு இணை செயலாளர் முத்துக்குமார், மாநில வக்கீல் அணி இணை செயலாளர் மகேந்திரன், மாநில இளைஞர் பாசறை இணை செயலாளர் நூர்அலாவுதீன், விழுப்புரம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் பார்த்திபன், ஒன்றிய செயலாளர்கள் பொன்.சிவா, செல்வம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சக்திவேல், மாணவர் அணி செயலாளர் கணேஷ்சக்திவேல், வக்கீல் அணி செயலாளர் காளிதாஸ், சிறுபான்மை பிரிவு செயலாளர் ஷாகுல்அமீது உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் நகர செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story