கருங்கல் அருகே பயங்கரம் சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு


கருங்கல் அருகே பயங்கரம் சொத்து தகராறில் தந்தை வெட்டிக்கொலை தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 March 2019 3:45 AM IST (Updated: 26 March 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

கருங்கல் அருகே சொத்து தகராறில் தந்தையை வெட்டிக்கொலை செய்த தொழிலாளியை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

கருங்கல்,

கருங்கல் அருகே கிள்ளியூர் பட்டாரவிளை பிலாக்கவிளை பகுதியை சேர்ந்தவர் செல்லத்தங்கம் (வயது 62). இவருக்கு மனைவியும், ஒரு மகளும், 2 மகன்களும் உள்ளனர். இவரது மகன் அனிஷ்(23), தொழிலாளி. இவருக்கு கஞ்சா பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், தினமும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்தார்.

இந்தநிலையில் செல்லத்தங்கம் தனது மகளுக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார். இதற்காக தன்னுடைய ஒரு சொத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து வந்தார்.

நேற்று முன்தினம் மாலையில் அனிஷ் தனக்குள்ள சொத்தின் பங்கை கேட்டு செல்லத்தங்கத்திடம் தகராறு செய்தார். அதற்கு செல்லத்தங்கம், உனக்கு திருமணம் செய்தபின் சொத்தில் பங்கு பிரித்து தருவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அனிஷ், வெட்டு கத்தியால் தந்தை செல்லத்தங்கத்தை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர், அவரை துணியில் கட்டி வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் வீசினார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த செல்லத்தங்கத்தின் மனைவியும், மகளும் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அனிஷ் கிணற்றுக்குள் வீசப்பட்ட செல்லத்தங்கத்தை வெளியே தூக்கிப் போட்டு விட்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் செல்லத்தங்கத்தை பார்த்தபோது அவர் இறந்து இருந்தது தெரியவந்தது.

இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் பொன்தேவி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து செல்லத்தங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து செல்லத்தங்கத்தின் மகள் அனுஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அனிசை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story