கர்நாடகத்தில் முதல்கட்ட தேர்தல் நடைபெறும் 14 தொகுதிகளுக்கு வேட்பு மனு தாக்கல் இன்று முடிகிறது - ஒரே நாளில் தேவேகவுடா உள்பட 109 பேர் மனு செய்தனர்
முதல்கட்ட தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இதனால் நேற்று ஒரே நாளில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, நிகில் குமாரசாமி உள்பட 109 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் மொத்தம் 28 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் தலா 14 தொகுதிகள் வீதம் 2 கட்டங்களாக ஏப்ரல் மாதம் 18, 23-ந் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. பெங்களூரு உள்பட தென் கர்நாடகத்தில் உள்ள 14 தொகுதிகளில் ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.
முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கியது. மனு தாக்கலுக்கு இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். வேட்பு மனு தாக்கல் செய்ய ஒரு நாள் மட்டுமே இருப்பதால், நேற்று அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், சுயேச்சையாக போட்டியிடுபவர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதனால் கலெக்டர் அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.
குறிப்பாக துமகூரு தொகுதியில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, காங்கிரஸ் கூட்டணியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் முன்னதாக ஊர்வலமாக வந்து, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தார். அவருடன் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், ஜனதா தளம்(எஸ்) செய்தித்தொடர்பாளர் ரமேஷ்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அதே ேபால் மண்டியா தொகுதியில், ஜனதா தளம்(எஸ்) சார்பில் முதல்-மந்திரி குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி பகல் 3.10 மணி அளவில் மனுவை தேர்தல், அதிகாரி மஞ்சுஸ்ரீயிடம் தாக்கல் செய்தார்.
அப்போது பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா, காங்கிரஸ் சார்பில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார், நிகிலின் தாயார் அனிதா குமாரசாமி, சிறிய நீர்ப்பாசனத்துறை மந்திரி சி.எஸ்.புட்டராஜூ ஆகியோர் உடன் இருந்தனர்.மனு தாக்கல் செய்வதற்கு முன்பு, தனது பெரியப்பாவான மந்திரி எச்.டி.ரேவண்ணாவின் காலில் விழுந்து நிகில் குமாரசாமி ஆசி பெற்றார்.
பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளரான ரிஸ்வான் அர்ஷத் நேற்று மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி லோகேசிடம் மனுவை தாக்கல் செய்தார்.
அப்போது பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி கிருஷ்ண பைரேகவுடா, மந்திரி ஜமீர்அகமதுகான், முன்னாள் மேயர் சம்பத்ராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பெங்களூரு வடக்கு தொகுதியில் பா.ஜனதா வேட்பாளராக மத்திய மந்திரி சதானந்தகவுடா, நேற்று பெங்களூரு நகர கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தார். அப்போது, நாராயணசாமி எம்.எல்.சி., அஸ்வத் நாராயணா எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
ஹாசன் தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஏ.மஞ்சு, கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தார். இதில் கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா கலந்துகொண்டார்.
சிக்பள்ளாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வீரப்பமொய்லி கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மனுவை தாக்கல் செய்தார். அதே தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் முன்னாள் மந்திரி பச்சேகவுடாவும் நேற்று மனு தாக்கல் செய்தார்.
மைசூரு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜயசங்கர் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து, மனுவை தாக்கல் செய்தார். இதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதுேபால் மைசூரு தொகுதி பா.ஜனதா வேட்பாளரான பிரதாப் சிம்ஹா எம்.பி.யும் நேற்று கட்சியினருடன் பேரணியாக வந்து மைசூரு கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியான அபிராம் ஜி.சங்கரிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கோலார் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எச்.முனியப்பா, அக்கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். சாம்ராஜ்நகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் துருவ நாராயண், கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியிடம் மனு தாக்கல் செய்தார்.
கர்நாடகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மண்டியா தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளர் நிகில் குமாரசாமி மனு தாக்கல் செய்த பிறகு, தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.
இந்த கூட்டத்தில் மந்திரி டி.கே.சிவக்குமார் பேசுகையில், “மண்டியா தொகுதியில் காங்கிரஸ் கட்சியினர் ஜனதா தளம்(எஸ்) நிர்வாகிகளுடன் ஒன்று சேர்ந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். பா.ஜனதாவை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மதசார்பற்ற கொள்கை கொண்ட கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கூட்டணி அமைத்துள்ளன. அதனால் நிகில் குமாரசாமியை லட்சக்கணக்கான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்” என்றார்.
வேட்பாளர் நிகில் குமாரசாமி பேசுகையில், “நான் உங்கள் வீட்டின் மகன். உயிர் உள்ளவரை மண்டியா மக்களுக்கு சேவையாற்றுவேன். நான் உங்களை விட்டுச்செல்ல மாட்டேன். என்னை நீங்கள் ஆதரிக்க வேண்டும். உங்கள் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். என்னை வெற்றி பெற வையுங்கள்” என்றார்.
நேற்று ஒரேநாளில் 109 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் மூலம் முதல்கட்டமாக தேர்தல் நடக்கும் 14 தொகுதிகளில் மொத்தம் 181 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
14 தொகுதிகளில் பெரும்பாலான வேட்பாளர்கள் நேற்று மனு தாக்கல் செய்துவிட்டனர். இதன் மூலம் கர்நாடகத்தில் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Related Tags :
Next Story