ஆத்தூரில் 9 மாதங்களுக்கு முன்பு மாயமானவர் வழக்கில் துப்பு துலங்கியது: தண்ணீரில் மூழ்கடித்து விவசாயி கொலை 2 பேர் கைது-பரபரப்பு வாக்குமூலம்
ஆத்தூரில் 9 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயி தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி,
ஆத்தூரில் 9 மாதங்களுக்கு முன்பு மாயமான விவசாயி தண்ணீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வெற்றிலை விவசாயி
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சேனையர் தெருவைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 60). இவர் வெற்றிலை கொடிக்கால்களை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணமாகி விட்டது.
இந்த நிலையில் கடந்த 24-6-2018 அன்று மாரியப்பனின் நண்பரான ஆத்தூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மணி விபத்தில் உயிரிழந்தார். எனவே, மாரியப்பன் துக்கம் விசாரிக்க தனது நண்பரின் வீட்டுக்கு சென்றார். பின்னர் மறுநாளில் இருந்து மாரியப்பன் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில், ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குளத்தில் உடல் மீட்பு
இதையடுத்து கடந்த 2-7-2018 அன்று ஆத்தூர் குளத்தில் அமலைச்செடிகளுக்கு இடையில் முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அது மாரியப்பனின் உடலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். அந்த உடலை பார்வையிட்ட மாரியப்பனின் குடும்பத்தினர், அது மாரியப்பனின் உடல் இல்லை என்று தெரிவித்தனர். தொடர்ந்து அந்த உடலின் பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பினர். இதன் முடிவு கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் ஆத்தூர் குளத்தில் இறந்து கிடந்தது மாரியப்பன் என்பது உறுதியானது. இதற்கிடையே, நேற்று முன்தினம் ஆத்தூரில் நடந்து சென்ற அப்பகுதியைச் சேர்ந்த இசக்கிமுத்துவிடம் 2 மர்மநபர்கள் பணம் கேட்டு மிரட்டினர். ஆனால் இசக்கிமுத்து பணம் கொடுக்க மறுத்து விட்டார். அப்போது மர்மநபர்கள், கடந்த 9 மாதங்களுக்கு முன்பு ஒருவரை ஆத்தூர் குளத்தில் தண்ணீரில் மூழ்கடித்து கொன்று தங்க மோதிரத்தை திருடி விட்டு, அவரது உடலை அமலைச்செடிக்குள் வீசியதாகவும், அதேபோன்று இசக்கிமுத்துவையும் கொன்று விடுவதாகவும் மிரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிச்சென்ற இசக்கிமுத்து, இதுகுறித்து ஆத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
2 பேர் கைது
உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மற்றும் போலீசார் விரைந்து சென்று, அந்த 2 மர்மநபர்களையும் பிடித்து விசாரித்தனர். இதில் துப்பு துலங்கியது. பிடிபட்டவர்கள் ஆத்தூர் அருகே கொழுவைநல்லூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த முத்துகுமார் (35), சங்கர் (40) என்பதும், இவர்கள் தங்களுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து மாரியப்பனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதையடுத்து வெற்றிலை விவசாயி மாரியப்பன் மாயமான வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து முத்துகுமார், சங்கர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் மாரியப்பன் கொலையில் தொடர்புடைய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கைதான முத்துகுமார், சங்கர் ஆகியோர் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் வருமாறு:-
தங்க மோதிரத்துக்காக...
நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் கடந்த 25-6-2018 அன்று ஆத்தூர் குளத்தில் குளிக்க சென்றோம். அப்போது அங்கு குளத்தில் குளித்து கொண்டிருந்த மாரியப்பனிடம் பணம் கேட்டு மிரட்டினோம். ஆனால் அவர் பணத்தை தர மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் 5 பேரும் சேர்ந்து மாரியப்பனை தண்ணீருக்குள் மூழ்கடித்துக் கொலை செய்தோம். பின்னர் அவர் அணிந்து இருந்து தங்க மோதிரத்தை திருடிக்கொண்டு, அவரது உடலை அமலைச்செடிகளுக்கு நடுவில் வீசிச்சென்றோம்.
இவ்வாறு அவர்கள் வாக்குமூலத்தில் கூறி உள்ளனர்.
இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story