தஞ்சையில், கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்


தஞ்சையில், கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 12:21 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், கல்வி உதவித்தொகை வழங்கக்கோரி கல்லூரி மாணவ-மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரவிந்த்சாமி தலைமை தாங்கினார்.

கடந்த 1 ஆண்டாக எஸ்.சி., எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவிகளுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையை வழங்காத தமிழக அரசை கண்டித்தும், உடனடியாக கல்வி உதவித்தொகையை வழங்க வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

1 மணி நேரத்திற்கு மேல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் நேரில் வராததால் ஆத்திரம் அடைந்த மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபடுவதற்காக கல்லூரி வளாகத்தில் இருந்து வெளியே ஓடி வந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர்கள் ஸ்ரீதர், செந்தில்குமார் மற்றும் அதிரடிப்படை போலீசார், மாணவ-மாணவிகளை தடுத்து நிறுத்தி கல்லூரி வளாகத்திற்குள் செல்லும்படி தள்ளினர். இதனால் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

பின்னர் பேராசிரியர்கள் வந்து கூறியதை தொடர்ந்து மாணவ-மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் சென்று தட்டுகளை ஏந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலச்சந்திரன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு மூன்று நாட்களுக்குள்ளும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஒரு வாரத்திற்குள்ளும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.

இதை ஏற்று மாணவ, மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து மாணவர்கள் சிலர் கூறும்போது, ஒரு வாரத்திற்குள் உதவித்தொகை வழங்காவிட்டால் அடுத்த மாதம்(ஏப்ரல்) 3-ந் தேதி முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதுடன், தேர்தலை புறக்கணிக்கும் முடிவையும் எடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

Next Story