கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு


கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 12:43 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயல் நிவாரணம் கிடைக்காததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்து உள்ளனர்.

சேதுபாவாசத்திரம்,

கடந்த ஆண்டு (2018) நவம்பர் மாதம் 15-ந் தேதி தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களை கஜா புயல் கடுமையாக தாக்கியது. புயலில் உயிர் சேதங்களை விட பொருட்சேதங்கள் அதிகமாக இருந்தது. தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியான பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய வாழ்வாதாரமாக திகழ்ந்து வந்த தென்னந்தோப்புகள் புயலில் கடுமையான சேதத்தை சந்தித்தன.

தென்னை மரங்கள் சாய்ந்ததால் வருமானத்துக்கு வேறு வழியின்றி தென்னை விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர். புதிதாக நடப்பட்ட தென்னங்கன்றுகள் வளர்ந்து தேங்காய் காய்ப்பதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும் என விவசாயிகள் கூறுகிறார்கள். கடைமடை பகுதியில் உள்ள பல கிராமங்களில் புயல் தாக்கி 4 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை.

கால்நடைகளை இழந்தவர்கள், தென்னை உள்ளிட்ட மரங்களை இழந்தவர்கள் வருமானமின்றி தவிக்கும் நிலையில் உள்ளனர். புயல் சேத விவரங்கள் முழுமையாக கணக்கெடுக்கப்படவில்லை என்றும், அதன் காரணமாக நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான தென்னை விவசாயிகளுக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. நிவாரணம் வழங்குவதில் விடுபட்டவர்களிடம் இருந்து வங்கி கணக்கு புத்தகம், ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை அதிகாரிகள் சேகரித்தனர். இவ்வாறு ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு 60 நாட்களாகியும் நிவாரணத்தொகை வந்து சேரவில்லை என கிராம மக்கள் விரக்தி யுடன் கூறுகிறார்கள்.

நிவாரணத்தொகை கிடைக்காததால் தென்னை விவசாயிகள் பலர் தங்களுடைய தென்னந்தோப்புகளை சீரமைத்து, புதிய மரங்களை நட முடியாமல் உள்ளனர். நிவாரணம் கேட்டு வேளாண்மைத்துறை, வருவாயத்துறை அலுவலகங்களுக்கும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கும் கிராம மக்கள் அலைய வேண்டிய நிலை இன்றளவும் நீடிக்கிறது.

கூரை வீடுகளை இழந்தவர்கள் எப்போது நிவாரணம் கிடைக்கும், புதிய வீட்டை எப்போது கட்டலாம் என காத்திருக்கிறார்கள். நிவாரணம் வழங்கக்கோரி சேதுபாவாசத்திரம் பகுதியில் சாலை மறியல், உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த மரக்காவலசை, கொடிவயல், பாலாவயல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பான துண்டு பிரசுரங்களை கிராம மக்கள் வெளியிட்டுள்ளனர். 

Next Story