தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்


தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்
x
தினத்தந்தி 27 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை நாடாளுமன்ற, சட்டசபை தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் தஞ்சை சட்டசபை இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18–ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு கடந்த 19–ந் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இறுதிநாளான நேற்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. வேட்பாளர் பொன்.முருகேசன் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி அண்ணாதுரையிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் கட்சியின் சார்பில் ஒரு மனுவும், சுயேச்சையாக ஒரு மனுவும் தாக்கல் செய்தார்.

அவருடன் அ.ம.மு.க. மாவட்ட செயலாளர் சேகர், மாநில ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் செல்வம், வக்கீல் பிரிவு இணைச் செயலாளர் வக்கீல் தங்கப்பன், பேராசிரியர் நித்தியானந்தம் ஆகியோர் உடன் சென்றனர். இவருக்கு மாற்றுவேட்பாளராக துரை வேட்புமனு தாக்கல் செய்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை பெசன்ட்நகர் 28–வது குறுக்கு தெருவை சேர்ந்த சம்பத்ராமதாஸ் வேட்புமனு தாக்கல் செய்தார். த.மா.கா. வேட்பாளர் என்.ஆர்.நடராஜன் 2–வது முறையாகவும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கிருஷ்ணகுமார் 3–வது முறையாகவும், சுயேச்சை வேட்பாளர் செல்வராஜ் 2–வது முறையாகவும் நேற்று கூடுதலாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.

நாம் தமிழர் கட்சி மாற்று வேட்பாளர் மாரிமுத்து, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஸ்டாலின், சுயேச்சை வேட்பாளர்கள் வேதவள்ளி, ஏகலைவன், செந்தில்நாதன், விஜய்சங்கர், ராஜேந்திரன், விவேகானந்தன் ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் அண்ணாதுரையிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

தஞ்சை சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. வேட்பாளர் எம்.ரெங்கசாமி தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேசிடம் நேற்றுபிற்பகல் 2.45 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். அவருடன் மாநில வக்கீல்பிரிவு செயலாளர் கார்த்திகேயன், மாவட்ட வக்கீல்பிரிவு செயலாளர் நல்லதுரை, மாவட்ட பொருளாளர் விருத்தாசலம், எஸ்.டி.பி.ஐ. கட்சி தொகுதி செயலாளர் ஜாகீர்உசேன் ஆகியோர் சென்றனர்.

அ.ம.மு.க. மாற்றுவேட்பாளராக மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஸ்வரன் வேட்புமனு தாக்கல் செய்தார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சென்னை விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரை சேர்ந்த துரைசாமி என்கிற துரையரசன் வேட்புமனு தாக்கல் செய்தார். சுயேச்சையாக போட்டியிட தஞ்சை நாகைரோடு தேவபூமிநகரை சேர்ந்த பாபுஜி, கரந்தை பாப்பாரசின்னையா பிள்ளை தெருவை சேர்ந்த சப்தகிரி, தஞ்சை வைரம்நகரை சேர்ந்த பழனிவேல், தஞ்சை மேலஅலங்கம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த சாய்பிரசாத், மேலவீதி வெங்கடாசலம் செட்டியார் சந்து பகுதியை சேர்ந்த செல்வராஜ், மேலவீதியை சேர்ந்த பார்த்தசாரதி, தஞ்சையை அடுத்த மாரியம்மன்கோவில் ரோஜாநகரை சேர்ந்த ரமேஷ், கருக்காடிப்பட்டி மேலதோப்பு பகுதியை சேர்ந்த ஏ.ரெங்கசாமி ஆகியோர் தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேசிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனு பரிசீலனை இன்று(புதன்கிழமை) நடக்கிறது. வேட்புமனு திரும்ப பெற 29–ந் தேதி கடைசி நாளாகும்.

3 மணியை கடந்த பின்னரும் வேட்புமனு தாக்கல் டோக்கன் இல்லாததால் 2–வது வேட்புமனு தாக்கல் செய்ய முடியாமல் எம்.ரெங்கசாமி தவிப்பு

சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட அ.ம.மு.க. வேட்பாளர் எம்.ரெங்கசாமி நேற்றுபிற்பகல் 2.45 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்புமனு நிறைவடையும் நேரமான பிற்பகல் 3 மணி நெருங்கிய நேரத்தில் இன்னும் பலர் வேட்புமனு தாக்கல் செய்ய காத்து இருக்கும் தகவல் தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேசின் கவனத்திற்கு வந்தது. உடனே அவர், அவர்களுக்கு டோக்கன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார். அதன்படி வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தவர்களுக்கு வரிசை எண் எழுதப்பட்ட டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்கியவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அறையில் அமர வைக்கப்பட்டனர்.

இவர்களுடன் அ.ம.மு.க. மாவட்ட பொருளாளர் விருத்தாசலம் டோக்கனுடன் அமர்ந்து இருந்தார். அவரும் வேட்புமனு தாக்கல் செய்வாரோ? என தகவல் பரவியது. ஆனால் எம்.ரெங்கசாமி மற்றொரு வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாகவும், அவருக்கு பதிலாக மாவட்ட பொருளாளர் டோக்கனுடன் அமர்ந்து இருப்பதாகவும் கட்சியினர் தெரிவித்தனர். அதன்படி வேட்புமனுவை பூர்த்தி செய்யும் பணியில் அறைக்கு வெளியே எம்.ரெங்கசாமி ஈடுபட்டு கொண்டிருந்தார்.

டோக்கன் பெற்றவர்களிடம் வேட்புமனுவை பெற்ற தேர்தல் நடத்தும் அதிகாரி, மாவட்ட பொருளாளர் விருத்தாசலத்திடம் வேட்புமனு எங்கே என்று கேட்டார். அதற்கு வேட்புமனு தாக்கல் செய்யக்கூடிய எம்.ரெங்கசாமி வெளியே மனுவுடன் நிற்பதாகவும், அவருக்கு பதிலாக நான் டோக்கன் பெற்று வந்ததாகவும் கூறினார். உங்கள் கையில் வேட்புமனு இல்லை. நேரம் முடிந்ததால் வெளியே இருந்து மற்றவர்கள் உள்ளே வர அனுமதி கிடையாது என்று அதிகாரி கூறிவிட்டார்.

இதை அறிந்த வக்கீல் நல்லதுரை, நீங்கள் தானே வேட்பாளருக்கு பதிலாக மற்றொருவர் டோக்கன் வாங்கலாம் என்று கூறினீர்கள் என சொன்னார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீசார் விரைந்து வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இது குறித்து அ.ம.மு.க.வினர் கூறும்போது, திட்டமிட்டே 2–வது வேட்புமனுவை தாக்கல் செய்யவிடாமல் தடுத்துவிட்டனர் என குற்றம்சாட்டினர்.

தேர்தல் நடத்தும் அதிகாரி சுரேஷ் கூறும்போது, பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவரிடம் வேட்புமனு இல்லை. நான் வேட்புமனுவே வாங்காத நிலையில் எப்படி தள்ளுபடி செய்ய முடியும் என்றார். சுயேச்சை வேட்பாளர் ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். டெபாசிட் தொகையை செலுத்த கூறியபோது அவரிடம் பணம் இல்லை. வெளியே பணத்துடன் உறவினர் நிற்பதாக கூறினார். ஆனால் நேரம் கடந்துவிட்டதால் வேறு யாரையும் அனுமதிக்க முடியாது என அதிகாரி கூறிவிட்டார். இதனால் டெபாசிட் தொகை செலுத்தாமல் வேட்புமனுவையும் பெறாமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.


Next Story