சுதந்திர போராட்ட காலத்தில் கவிதையை கூர்மையான ஆயுதமாக பாரதியார் பயன்படுத்தினார் துணைவேந்தர் பேச்சு


சுதந்திர போராட்ட காலத்தில் கவிதையை கூர்மையான ஆயுதமாக பாரதியார் பயன்படுத்தினார் துணைவேந்தர் பேச்சு
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

சுதந்திர போராட்ட காலத்தில் கவிதையை கூர்மையான ஆயுதமாக பாரதியார் பயன்படுத்தினார் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேசினார்.

காரைக்குடி,

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் அயல்மொழிகள் துறை சார்பில் உலகக் கவிதைகள் தின விழா கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவர் நோயல் ஜோசப் இருதயராஜூம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் முத்துவீரப்பனும் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசிய போது, மாணவர்கள் கவிதைகளின் முக்கியத்துவத்தையும், கவிதைகள் எழுதக்கூடிய படைப்பாற்றலையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சுதந்திரப் போராட்டக் காலத்தில் கவிதையை மிக கூர்மையான ஆயுதமாக பாரதியார் உள்ளிட்டோர் பயன்படுத்தினர் என்றார்.

சிறப்பு விருந்தினரான பேராசிரியர் நோயல், கவிதைகளை எப்படி வாசிக்கவேண்டும், எப்படி திறனாய்வு செய்யவேண்டும் என்பது பற்றி அமெரிக்க கவிஞர் வாலாஸ் ஸ்டீவன்ஸ் படைப்பையும், இங்கிலாந்து கவிஞர் வில்லியம் பட்லர்யேட்ஸ் படைப்பையும் குறிப்பிட்டார். மேலும் கவிதை என்பது புதுமையானதாகவும், சிறப்பான பழமைக்கூறுகளை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும் என்றார்.

மற்றொரு சிறப்பு விருந்தினரான தமிழ்த்துறைத்தலைவர் முத்துவீரப்பன், கவிதை என்பது மானுட வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது ஆனால் அதே நேரத்தில் அது வாழ்க்கையைச் செம்மைப்படுத்துவதாகவும், சீர்படுத்துவதாகவும் அமையவேண்டும் என்றார். மேலும் சங்ககால இலக்கியத்திலிருந்தும் தற்கால இலக்கியத்திலிருந்தும் பல்வேறு கவிதைகளை மேற்கோள்காட்டினார். தொடர்ந்து

தமிழில் புதுக்கவிதையின் வளர்ச்சியைக் குறிப்பிட்டு பேசிய அவர், அதன் வளர்ச்சியையும், பரிமாணத்தையும் 7 கட்டங்களாக பிரித்து விளக்கினார்.

முன்னதாக வரவேற்புரை ஆற்றிய ஆங்கிலத்துறைத்தலைவர் மதன் ஆங்கிலக்கவிதைகளின் வரலாற்றை எடுத்துரைத்தார். நிறைவாக உதவிப்பேராசிரியர் நடராசன் நன்றி கூறினார்.


Next Story