எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை, தனியார் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய உறவினர்கள் - சின்னசேலத்தில் பரபரப்பு


எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை, தனியார் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பொருட்களை சூறையாடிய உறவினர்கள் - சின்னசேலத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 27 March 2019 5:00 AM IST (Updated: 27 March 2019 1:14 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலத்தில் தனியார் பள்ளி விடுதியில் எஸ்.எஸ்.எல்.சி. மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதனால் அவரது உறவினர்கள் அந்த பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து பொருட்களை சூறையாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சின்னசேலம்,

சின்னசேலத்தில் புனித சிறுமலர் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1,600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி வளாகத்தில் வெளியூர் மாணவ-மாணவிகள் தங்கி படிப்பதற்காக தனித்தனியாக விடுதிகள் உள்ளன. இதில் தியாகதுருகம் அருகே உள்ள நூரோலை பகுதியை சேர்ந்த வேம்பன் மகள் பூங்குழலி (வயது 15) என்பவரும் தங்கியிருந்து எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தார்.

நேற்று முன்தினம் நடந்த கணிதத் தேர்வை பூங்குழலி சரியாக எழுதாததால், அவர் விடுதியில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த சின்னசேலம் போலீசார், பூங்குழலியின் உடலை கைப்பற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே பூங்குழலி இறந்தது பற்றி அறிந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு வந்து, பூங்குழலியின் உடலை பார்க்க முயன்றனர். அப்போது அங்கிருந்த போலீசார், பூங்குழலியின் உடலை பார்க்க அனுமதி அளிக்காமல், அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் இரவில் சின்னசேலத்துக்கு சென்று பள்ளிக்கூடத்தை முற்றுகையிட்டும், பள்ளி முன்பு சாலை மறியலிலும் ஈடுபட்டனர். பின்னர் இரவு நீண்ட நேரமானதால் அவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை பூங்குழலியின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து அங்கிருந்த மேஜை, நாற்காலி, கணினி மற்றும் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதை தடுக்க முயன்ற பள்ளிக்கூடத்தின் ஊழியர்களுக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதையடுத்து அவர்கள் சின்னசேலம் பஸ் நிலையம் அருகில் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பூங்குழலியின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், எங்களுக்கு தகவல் தெரிவிக்காமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் இருந்து பூங்குழலியின் உடல் எதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை. அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அதனால் உரிய விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும், அதனடிப்படையில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனை ஏற்றுக்கொண்ட மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Next Story