போலீஸ் விசாரணைக்கு சென்றுவந்த லாரி டிரைவர் திடீர் சாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
போலீஸ் விசாரணைக்காக சென்றுவந்த லாரி டிரைவர் திடீரென இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
தென்காசி,
போலீஸ் விசாரணைக்காக சென்றுவந்த லாரி டிரைவர் திடீரென இறந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
லாரி டிரைவர் திடீர் சாவு
நெல்லை மாவட்டம் சுரண்டை அருகே உள்ள பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் முத்தையா என்பவருடைய மகன் முருகன் (வயது 31). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சேர்ந்தமரம் போலீசார் அவரை சோதனை செய்து பார்த்தபோது, அவர் மது அருந்தி இருந்தது தெரியவந்தது. உடனே அவரை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
பின்னர் நேற்று அதிகாலை போலீசார் முருகனை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். அவர் ஒரு பஸ்சில் ஏறி சென்று கொண்டிருந்தபோது, திடீரென தலை சுற்றுவதாக கூறியுள்ளார். இதனால் அவரை பஸ்சில் இருந்து ஆனைகுளம் என்ற இடத்தில் இறக்கி விட்டுள்ளனர். ஆனால் சிறிது நேரத்தில் அங்கேயே அவர் இறந்துவிட்டார்.
உடலை வாங்க மறுத்து போராட்டம்
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சுரண்டை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதனை அறிந்ததும் முருகனின் உறவினர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். ஆஸ்பத்திரியில் முருகனின் உடல் பிரேத பரிசோதனை முடிந்ததும், அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
அப்போது முருகனின் சாவில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் தாக்கியதால் அவர் இறந்து விட்டதாகவும் கூறி உடலை வாங்க உறவினர்கள் மறுத்து விட்டனர். நேற்று மதியம் தொடங்கிய இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது. இதனை அறிந்ததும் ஆலங்குளம் போலீஸ் துணை சூப்பிரண்டு சுபாஷினி, தென்காசி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் சமரசம் ஆகாமல் உடலை வாங்க மறுத்து விட்டனர்.
Related Tags :
Next Story