தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வெடிமருந்து விற்பனை மையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை


தேர்தலை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் வெடிமருந்து விற்பனை மையங்கள் கண்காணிக்கப்பட வேண்டும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை
x
தினத்தந்தி 27 March 2019 4:00 AM IST (Updated: 27 March 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி மாவட்டத்தில் உரிமம் பெற்ற வெடிபொருள் மற்றும் வெடிமருந்து விற்பனை மையங்களை முறையாக கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

17–வது நாடாளுமன்ற தேர்தல் தமிழகம் முழுவதும் ஏப்ரல் 18–ந்தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது.

நேர்மையான, சுதந்திரமான தேர்தல் நடைபெற தேர்தல் கமி‌ஷன் பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகளை அமல்படுத்த 21 ஆய்வு குழுக்களை மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் சிவஞானம் நியமித்துள்ளார். இந்த ஆய்வுக்குழுக்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் கொண்டு செல்லப்பட்ட ரூ.2 கோடி வரையிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 10 தேர்தல் விதிமுறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் உரிமம பெற்ற வெடிபொருள் மற்றும் வெடி மருந்து விற்பனை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இம்மையங்களை உரிமம் வழங்கிய அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தாலும், இந்த ஆய்வு முறையாக நடத்தப்படுகிறதா? என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் உள்ளது. மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் கல்குவாரிகளில் வெடிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் அனுமதி இல்லாமல் பட்டாசு தயாரிப்பு மற்றும் கருந்திரி தயாரிப்பு ஆகியவையும் பரவலாக நடைபெற்று வருகிறது. போலீசாரும் தயாரிப்பு மையங்களில் உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாமல் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்களிலும், வாகனங்களில் கொண்டு செல்லும்போதும் ஆய்வு நடத்தப்பட்டதாக கூறி வழக்குகள் பதிவு செய்யப்படும் நிலை இருக்கிறது. எனினும் இந்த தயாரிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

வெடிபொருள் மற்றும் குவாரிகளுக்கான வெடி ஆகியவற்றுக்கான மூலப்பொருள் அதற்கான விற்பனை மையங்களில் தான் கொள்முதல் செய்யப்படவேண்டும். எனவே தேர்தல் நடைபெறுவதையொட்டி இந்தமையங்களில் உரிய கண்காணிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


Next Story