முறையாக பராமரித்தால் பாம்பன் பாலத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் அதிகாரி தகவல்


முறையாக பராமரித்தால் பாம்பன் பாலத்தை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் பாலத்தை முறையாக பராமரித்தால் இன்னும் 50 ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிகாரி தெரிவித்தார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் தீவை மண்டபம் நிலப்பகுதியுடன் இணைப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பாம்பன் ரோடு பாலம் ஆகும். இந்த பாலத்தை கட்டி முடிக்க ரூ.40 கோடி செலவானது. கடலுக்குள் 79 தூண்களை கொண்டு சுமார் 100 அடி உயரத்தில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 2 கிலோ மீட்டர் நீளமுடைய இந்த பாலம் அதிநவீன கட்டுமான தொழில்நுட்பத்துடன் கடலுக்குள் கட்டப்பட்ட முதல் பாலம் என்ற சிறப்பை பெற்றது. 1988–ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தியால் பாம்பன் பாலம் திறந்து வைக்கப்பட்டது. அன்று முதல் பாம்பன் பாலத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சாலை போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பாம்பன் பாலத்தின் மைய பகுதியில் உள்ள பேரிங் இணைப்பு மற்றும் கடலில் அமைந்துள்ள 79 தூண்களின் உறுதித்தன்மைகள் குறித்து கடந்த 23–ந்தேதி முதல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக சென்னையில் இருந்து 4 பேர் கொண்ட சிறப்பு பொறியாளர்கள் குழு வந்துள்ளது. இந்த குழுவினர், நகரும் கிரேன் மூலம் கடந்த 4 நாட்களாக கடலுக்குள் உள்ள தூண்களில் ஏதேனும் கீறல்கள் அல்லது உப்புக்காற்றினால் ஏதேனும் பாதிப்புகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து ஆய்வில் ஈடுபட்டு வரும் அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

தமிழகம் முழுவதும் சுமார் 2300–க்கும் மேற்பட்ட பாலங்கள் உள்ளன. மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உத்தரவுபடி தமிழகத்தில் உள்ள அனைத்து பாலங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். இந்தியாவிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த பாலம் என்றால் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரோடு பாலம் தான். இங்கு கடந்த 4 நாட்களாக பாலத்தின் ஒவ்வொரு தூண்கள், அதன் இடையில் பொறுத்தப்பட்டுள்ள பேரிங்குகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறோம். பாலத்தை பொறுத்த வரையிலும் பெரிய அளவில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை. தூண்களில் லேசான சேதம் உள்ளது. இதனால் பாதிப்பு எதும் இல்லை. இந்த சேதமும் தேசிய நெடுஞ்சாலை துறையின் மூலம் உடனடியாக சரி செய்யப்படும்.

பாலத்தை பொறுத்த வரையிலும் 100 ஆண்டு வரை பயன்படுத்தலாம். இதன்படி பாம்பன் பாலத்தை இன்னும் 50 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். கடலுக்குள் அமைந்துள்ளதால் இப்பாலத்தை முறையாக பராமரித்தால் மட்டுமே இன்னும் 50 ஆண்டுகளுக்கு உறுதி தன்மையுடன் இருக்கும். தற்போது நடந்து வரும் ஆய்வு பணி இன்னும் ஓரிரு நாளில் முடிவடையும். இந்த ஆய்வு அறிக்கையானது தேசிய நெடுஞ்சாலை துறைக்கு அனுப்பப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story