சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது மீனவர்களுக்கு கடற்படை அதிகாரி எச்சரிக்கை
சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்று மீனவர்களுக்கு கடற்படை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தார்.
பாகூர்,
கிருமாம்பாக்கத்தை அடுத்த மூர்த்திக்குப்பம் – புதுக்குப்பம் மீனவர் கிராமத்தில் மீனவர்கள், கடற்படை அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கடலோர காவல் படை அதிகாரி ஜெயக்குமார் தலைமை தாங்கினார். அலுவலர்கள் ஜெகதீசன், ராஜேஷ் குமார், ஜானகிராமன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். மூ.புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்து தலைவர் நாகப்பன் வரவேற்றார்.
கூட்டத்தில், கடல் பகுதியை பாதுகாப்பது, கடத்தல், சமூகவிரோத செயல்களை தடுப்பது மற்றும் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுதம் சிவகணேஷ், கிருமாம்பாக்கம் சப்–இன்ஸ்பெக்டர் தன்வந்திரி மற்றும் மீனவர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் கடற்படை அதிகாரிகள் பேசியதாவது:–
கடல் பகுதி வழியாக சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க கடற்படை அதிகாரிகள் மற்றும் போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சட்ட விரோத செயல்களுக்கு மீனவர்கள் யாரும் துணைபோக கூடாது. நடுக்கடலில் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் இருப்பதை கண்டால் உடனடியாக கடற்படை அலுவலகத்திற்கு வாக்கி டாக்கி மூலம் தெரிவிக்கவேண்டும்.
கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சுருக்கு வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக்கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். படகில் அதிவேக சத்தம் எழுப்பும் எந்திரங்களை பயன்படுத்துவதால், கடல் வாழ் உயிரினங்கள் அழியக்கூடிய சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே அதிக சத்தம் எழுப்பும் எந்திரங்களை பயன்படுத்தக்கூடாது. மீன்களுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை மீனவர்கள் கடலுக்கு எடுத்துச்செல்ல வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் பேசினர்.