பெரம்பலூர் தொகுதியில் கடைசி நாளில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 22 பேர் மனு தாக்கல்


பெரம்பலூர் தொகுதியில் கடைசி நாளில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 22 பேர் மனு தாக்கல்
x
தினத்தந்தி 27 March 2019 4:30 AM IST (Updated: 27 March 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளில் அ.ம.மு.க. வேட்பாளர் உள்பட 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர்,

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெறவுள்ளது. அந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி தொடங்கி, நேற்றுடன் முடிவடைந்தது. நேற்று வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர்கள் காலை 11 மணி முதலே பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்திற்கு வந்த வண்ணம் இருந்தனர். அதன்படி சுயேச்சை வேட்பாளர்களான 21 பேர் தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ.வும், கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான ராஜசேகரன் நேற்று மதியம் தனது கட்சிக்காரர்கள், கூட்டணி கட்சியான எஸ்.டி.பி.ஐ. கட்சிக்காரர்களுடன் பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டாவில் இருந்து ஊர்வலமாக கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேட்பாளருடன் வேட்புமனுதாக்கல் செய்வதற்கு நான்கு பேரும் மட்டுமே செல்ல அனுமதித்தனர். பின்னர் வேட் பாளர் ராஜசேகரன், பெரம்பலூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளர் கார்த்திகேயன், கட்சியின் மாநில விவசாய அணி துணை செயலாளர் செல்வகுமார், திருச்சி மாவட்ட அம்மா பேரவையின் செயலாளர் ராமு, பெரம்பலூர் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தலைவர் ரபீக் ஆகிய 4 பேருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று தேர்தல் நடத்தும் அதிகாரியும், கலெக்டருமான சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து ராஜசேகரனுக்கு மாற்று வேட்பாளராக, அ.ம.மு.க.வின் திருச்சி மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ராஜாராமநாதன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஏற்கனவே பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதி, தி.மு.க. கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சாந்தி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் முத்து லட்சுமி மற்றும் 4 சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். பாரிவேந்தருக்கு மாற்று வேட்பாளராக, அவரது மகன் ரவி பச்சமுத்து வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

நேற்று மட்டும் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் ராஜசேகரன் மற்றும் 21 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 22 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஜனநாயக கட்சி, அ.ம.மு.க.வின் மாற்று வேட்பாளர்களை தவிர்த்து பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மொத்தம் 30 வேட்பாளர்கள் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் வேட்பாளர்களில் சிலர் ஒரு வேட்பு மனுவிற்கு பதிலாக கூடுதலாக வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ததில் மொத்தம் 41 வேட்பு மனுக்கள் வந்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Next Story