நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி


நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் ஈ.ஆர்.ஈஸ்வரன் பேட்டி
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 2019-03-27T02:04:02+05:30)

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறினார்.

நாமக்கல்,

தி.மு.க. கூட்டணியில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இங்கு அக்கட்சியின் செயற்குழு உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் நேற்று தி.மு.க. கூட்டணியின் திருச்செங்கோடு சட்டசபை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்செங்கோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு கொ.ம.தே.க. மேற்கு மாவட்ட செயலாளர் நதிராஜவேல் தலைமை தாங்கினார். நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கே.எஸ்.மூர்த்தி எம்.எல்.ஏ., ஆதித்தமிழர் பேரவையின் நிறுவன தலைவர் அதியமான் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வேட்பாளர் சின்ராஜை அறிமுகம் செய்துவைத்து பேசினார்.

அப்போது அவர், லாரி தொழிலுக்கு இடையூறாக உள்ளது ஆள்பற்றாக்குறை. இதனை கருத்தில்கொண்டு ஒரு வண்டிக்கு 2 டிரைவர் இருக்கவேண்டும் என்ற நிலையை மாற்றி, ஒரு டிரைவர் முறையை அமல்படுத்த பாடுபடுவோம் என்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர் சின்ராஜ் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்பதற்கு தற்போது நடந்த செயல்வீரர்கள் கூட்டமே சாட்சி. இந்த கூட்டத்துக்கு தொண்டர்கள் மட்டுமில்லாமல் பொதுமக்களும் வருவது நம்பிக்கையை கொடுத்திருக்கிறது.

திருமணிமுத்தாறு திட்டம் இந்த நாடாளுமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண்டும். திருமணிமுத்தாறு திட்டத்திற்கு குரல் கொடுத்து கொண்டிருப்பவர்கள் நாங்கள். எதிர் அணியில் இருப்பவர்கள் எங்காவது திருமணிமுத்தாறு திட்டத்தை பற்றி குரல் கொடுத்து இருப்பார்களா?. பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் நேர்மையான அதிகாரியை நியமித்து கைது செய்ய வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகிகள் மற்றும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் உள்ளிட்ட தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

முன்னதாக திருச்செங்கோட்டில் உள்ள பரமத்திவேலூர் சாலையில் தேர்தல் அலுவலகத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் திறந்து வைத்தார். 

Next Story