எங்கள் கூட்டணி தலைவர்களை அவதூறாக பேசும் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேச்சு
எதிர்கட்சி தலைவர்களை அவதூறாக பேசும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.
தர்மபுரி,
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பென்னாகரம் ஒன்றியத்திற்குட்பட்ட பென்னாகரம், ஏரியூர், நெருப்பூர், செல்லமுடி, பெரும்பாலை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பிரசார கூட்டங்கள் நடைபெற்றது. இந்த கூட்டங்களுக்கு அ.தி.மு.க. விவசாய பிரிவு மாநில தலைவர் டி.ஆர்.அன்பழகன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.பி.வெங்கடேஷ் முன்னிலை வகித்தார்.
இந்த பிரசார கூட்டங்களில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து பேசியதாவது:-
இந்தியாவின் வலிமையான பிரதமராக திகழும் மோடி தலைமையிலான மத்திய அரசு மீண்டும் ஆட்சியில் அமர தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் ஒரு மெகா கூட்டணி அமைத்துள்ளது. இந்த கூட்டணியை பார்த்து எதிர் கட்சிக்கள் நடுங்கி போய் உள்ளனர். எங்கள் கூட்டணிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. வலிமையான இந்தியா, வளமான தமிழகம் என்ற நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள எங்கள் கூட்டணியை மிகப்பெரிய அளவில் வெற்றி அடைய பொதுமக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
எங்கள் கூட்டணி கட்சி தலைவர்களை அவதூறாக பேசி வரும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தர்மபுரி மாவட்ட மக்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ள தமிழக அரசு தொடர்ந்து நல்லாட்சி புரிந்திட எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டுகிறேன். மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டம், எண்ணேகொல் புதூரில் இருந்து தும்பல அள்ளி அணைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் உள்ளிட்ட நீர்பாசன திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்துள்ளார். இதன் மூலம் இந்த மாவட்டம் செழிப்பான மாவட்டமாக உருவாகும்.
இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.
Related Tags :
Next Story