திருட்டு வழக்கில் 62 பேர் கைது: ரூ.2.12 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்பு பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் பேட்டி


திருட்டு வழக்கில் 62 பேர் கைது: ரூ.2.12 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்பு பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் பேட்டி
x
தினத்தந்தி 26 March 2019 11:00 PM GMT (Updated: 26 March 2019 9:25 PM GMT)

திருட்டு வழக்கில் 62 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.2.12 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று கூறினார்.

பெங்களூரு, 

திருட்டு வழக்கில் 62 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களிடம் இருந்து ரூ.2.12 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்றும் பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று கூறினார்.

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் நேற்று மைசூரு ரோட்டில் உள்ள நகர ஆயுதப்படை மைதானத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ரூ.91.13 லட்சம் பொருட்கள் மீட்பு

பெங்களூருவில் திருட்டு, மோசடி, தங்கசங்கிலி பறிப்பு, கவனத்தை திசைதிருப்பி பணம் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு வந்த ஒருவரை சந்திரா லே-அவுட் போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் பெங்களூரு பி.சி.சி. லே-அவுட் பகுதியில் வசித்து வரும் சையத் அபுபக்கர் (38) என்பது தெரியவந்தது.

முன்னதாக, மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட சையத் அபுபக்கரை எச்.ஏ.எல். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் சொகுசு வாழ்க்கை வாழ மீண்டும் திருட்டில் ஈடுபட்டு வந்தார். இவர், போலீசில் சிக்கியதன் மூலம் 57 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான சையத் அபுபக்கரிடம் இருந்து 2 கிலோ 575 கிராம் தங்க நகைகள், 2 கார்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், ஒரு ‘வாக்கி-டாக்கி’ என்று மொத்தம் ரூ.91.13 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன.

தங்க நகைகள் திருட்டு

இதேபோல் வீடு மற்றும் கார் கண்ணாடியை உடைத்து தங்கநகைகள் திருடியதாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கனங்கூரு கிராமத்தை சேர்ந்த செலுவராய் (45) என்பவரையும் சந்திரா லே-அவுட் போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து ரூ.15.60 லட்சம் மதிப்பிலான 520 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

அதேபோல், திருட்டில் ஈடுபட்டு வந்த பெங்களூரு ஜீவனஹள்ளியை சேர்ந்த அம்ஜத் (30), சாம்புரா மெயின் ரோட்டை சேர்ந்த அக்மல் பேக் (30) ஆகியோரை ஞானபாரதி போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பிலான 405 கிராம் தங்கநகைகள் மீட்கப்பட்டது.

58 பேர் கைது

மேலும் பெங்களூரு மேற்கு மண்டலத்தில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டில் ஈடுபட்டதாக 58 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.93 லட்சம் மதிப்பிலான 274 மோட்டார் சைக்கிள்கள் மீட்கப்பட்டன. மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டவர்கள் சொகுசு வாழ்க்கை வாழ ஆசைப்பட்டு கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது.

கைதான 62 பேர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2.12 கோடி மதிப்பிலான பொருட்கள் மீட்கப்பட்டன. திறமையாக செயல்பட்டு பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்த மேற்கு மண்டல போலீசாருக்கு ரூ.2 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

முன்னதாக, கைதானவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கநகைகள், மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பார்வையிட்ட போலீஸ் கமிஷனர் சுனில் குமார், அந்த பொருட்களை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். இந்த பேட்டியின்போது பெங்களூரு மேற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனர் பி.கே.சிங், துணை போலீஸ் கமிஷனர் ரவி.டி.சன்னன்னவர் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story