மண்டியா சுயேச்சை வேட்பாளர் சுமலதாவுக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு உள்துறை மந்திரிக்கு கர்நாடக பா.ஜனதா கடிதம்
நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் தனக்கு மிரட்டல் வருவதாக ஏற்கனவே புகார் கூறி இருந்தார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவர் தனக்கு மிரட்டல் வருவதாக ஏற்கனவே புகார் கூறி இருந்தார். இந்த நிலையில் கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் அரவிந்த் லிம்பாவளி, உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங்குக்கு நேற்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் கூறி இருப்பதாவது:-
கர்நாடகத்தில் மண்டியா தொகுதியில் நடிகை சுமலதா சுயேச்சையாக போட்டியிடுகிறார். அவருக்கு நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சிகளிடம் இருந்து தொடர்ந்து மிரட்டல்கள் வருகின்றன.
நடிகர் தர்ஷன் வீட்டின் மீது காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த ரவுடிகள் கல்வீசி தாக்கினர். சுமலதா மனு தாக்கல் செய்தபோது, மண்டியாவில் கேபிள் டி.வி. ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சுமலதா, தர்ஷன், யஷ் ஆகியோருக்கு எதிராக அக்கட்சியினர் பேசி வருகிறார்கள். சமூக வலைத்தளத்திலும் வெறுப்புகளை பரப்பி வருகிறார்கள். வேட்பாளர் சுமலதா, தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்துள்ளார். அரசு எந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், தனது செயல்பாடுகள் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். முதல்-மந்திரியின் மகன் நிகில் குமாரசாமிக்கு எதிராக சுமலதா தேர்தலில் போட்டியிடுவதால், இத்தகைய நிகழ்வுகள் நடந்து வருகின்றன.
எனவே, மண்டியா சுயேச்சை வேட்பாளர் சுமலதா, அவரது மகன் அபிஷேக், நடிகர்கள் தர்ஷன், யஷ் ஆகியோருக்கு உடனடியாக மத்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story