கூடலூர் அருகே, கோழிப்பாலம் பகுதியில் காட்டுத்தீ - 6 ஏக்கர் புல்வெளி சாம்பல்


கூடலூர் அருகே, கோழிப்பாலம் பகுதியில் காட்டுத்தீ - 6 ஏக்கர் புல்வெளி சாம்பல்
x
தினத்தந்தி 26 March 2019 10:00 PM GMT (Updated: 26 March 2019 10:45 PM GMT)

கூடலூர் அருகே கோழிப்பாலம் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டதில் 6 ஏக்கர் புல்வெளி சாம்பலானது.

கூடலூர், 

கூடலூர் வனக்கோட்டத்தில் உள்ள கூடலூர், தேவாலா, தாவரவியல் மையம், பிதிர்காடு, சேரம்பாடி உள்ளிட்ட வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. இதனால் வனங்கள் பசுமை இழந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியை பயன்படுத்தி சமூக விரோதிகள் வனத்துக்கு தீ வைத்து வருகின்றனர்.

வனத்துக்கு தீ வைத்தால் சட்ட ரீதியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என வனத்துறையினர் எச்சரித்து வருகின்றனர். இருப்பினும் தீ வைக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வனத்துக்கு தீ வைப்பதால் அரிய வகை மூலிகைகள், சிறுவன உயிரினங்கள் அழிந்து வருகிறது. இதனால் வனத்துக்கு தீ வைப்பதை தடுக்க வனத்துறையினர் கூடலூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் கூடலூர் தாலுகா கர்க்கப்பாலி பகுதியில் நேற்று முன்தினம் திடீரென காட்டுத்தீ பரவியது. இதை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் உடனடியாக வனத்துறையால் அணைக்க முடிய வில்லை. மேலும் காட்டுத்தீயும் வேகமாக பரவியது. இதனால் பல கட்டங்களாக போராடி வனத்துறையினர் தீயை அணைத்தனர்.

இதேபோல் கூடலூர் அருகே கோழிப்பாலம் பகுதியில் பயங்கர காட்டுத்தீ பரவியது. வனச்சரகர் ராமகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

இதில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவிலான புல்வெளி சாம்பலானது. மேலும் சிறு வன உயிரினங்களும் தீயில் கருகியது. இது தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வனத்துக்கு தீ வைத்த நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Next Story