சேலம் மாவட்டத்தில், ஒரே நாளில் வாகன சோதனையில் ரூ.22 லட்சம் பறிமுதல்- 9 கிலோ வெள்ளிக்கட்டிகள் சிக்கியது
சேலம் மாவட்டத்தில் ஒரே நாளில் தேர்தல் பறக்கும்படை சோதனையில் சுமார் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 கிலோ வெள்ளிக்கட்டிகளும் சிக்கியது.
சேலம்,
சேலம் தெற்கு சட்டசபை தொகுதிக்குட்பட்ட குகை லைன்மேடு பகுதியில் கூடுதல் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சுந்தரராஜன், ஆனந்த யுவனேஷ் ஆகியோர் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் அவர் சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பது தெரியவந்தது.
மேலும் சோதனையின் போது அவரிடம் ரூ.3 லட்சத்து 81 ஆயிரம் மதிப்பிலான 9 கிலோ வெள்ளிக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான சதீசிடம் ஒப்படைத்தனர். பின்னர் அவைகள் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டன.
சேலம் கொண்டலாம்பட்டி புறவழிச்சாலையில் பறக்கும்படை அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. இதில் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த இறைச்சி வியாபாரியான பாபு என்பவர் ரூ.7 லட்சத்து 30 ஆயிரத்தை உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் கோரிமேடு பகுதியில் பறக்கும்படை அலுவலர் கண்ணன் தலைமையில் வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. காரில் இருந்த ராமசாமி என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி ரூ.70 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சேலம் ஏ.வி.ஆர். ரவுண்டானா பகுதியில் பறக்கும்படை அலுவலர் ரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து பணம் எடுத்துக் கொண்டு மேட்டூரில் உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு ரூ.5 லட்சத்து 95 ஆயிரத்து 834 வேனில் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நந்தகுமார் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
சேலம் சீலநாயக்கன்பட்டி ரவுண்டானா அருகே பறக்கும்படை அலுவலர் செல்வகுமார் தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த ஜீப்பை நிறுத்தி சோதனை நடத்தப்பட்டது. இந்த ஜீப்பில், குளிர்பான நிறுவன உரிமையாளர் சந்திரசேகர் என்பவரின் மனைவி சுமதியிடம் ரூ.84 ஆயிரத்து 394, உரிய ஆவணம் இல்லாமல் இருந்தது. அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சேலம் டவுன் பகுதியில் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையின் போது ரூ.1 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
மேட்டூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன் தலைமையில் மேட்டூர்-தர்மபுரி மெயின் ரோட்டில் அமரன்திட்டு என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த காரில் வந்த, சேலம் செவ்வாய்பேட்டையை சேர்ந்த நார்பத்து மாலி (வயது 26) என்பவர் தேர்தல் நடத்தை விதிமுறையை மீறி உரிய ஆவணங்கள் இன்றி ரூ.85 ஆயிரம் வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து மேட்டூர் உதவி கலெக்டர் லலிதாவிடம் ஒப்படைத்தனர்.
மேட்டூரில் இருந்து பவானி செல்லும் சாலையில் மாதையன்குட்டை என்ற இடத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் சரவணக்குமார் தலைமையில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டியை சேர்ந்த முருகராஜ்(52) என்பவர் பவானி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அவரது காரை தேர்தல் பறக்கும் படையினர் நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 800 இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
கெங்கவல்லி அருகே உள்ள கூடமலை சாலையில் வேளாண்மை அலுவலர் செல்வராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நாமக்கல் அருகே உள்ள புதன்சந்தைக்கு மாடு வாங்குவதற்கு கூடமலையில் இருந்து சரக்கு ஆட்டோவில் மாட்டு வியாபாரி சேகர் என்பவர் வந்தார். அந்த வாகனத்தை சோதனை செய்த போது, அவர் ரூ.1 லட்சத்து 17ஆயிரம் வைத்திருப்பது தெரியவந்தது.
இதற்கு உரிய ஆவணம் உள்ளதா? என்று தேர்தல் பறக்கும் படையினர் கேட்டதற்கு, எந்த ஒரு ஆவணமும் இல்லை என்று மாட்டு வியாபாரி கூறினார். இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, கெங்கவல்லி தேர்தல் அதிகாரியான தாசில்தார் சுந்தரராஜனிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
ஆத்தூர்-ராசிபுரம் பிரிவு ரோடு அருகே நேற்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக, ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த சரவணன் என்ற வியாபாரி ரூ.1 லட்சத்து 89 ஆயிரத்தை உரிய ஆவணங்கள் இன்றி காரில் கொண்டு வந்தார். அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து, ஆத்தூர் உதவி கலெக்டர் அபுல் காசிமிடம் ஒப்படைத்தனர்.
தலைவாசலை அடுத்த மும்முடி சோதனைச்சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி சின்னப்பன் தலைமையில் வாகன சோதனை நடந்தது. அப்போது கெங்கவல்லி அடுத்து நடுவலூர் கிராமத்தைச் சேர்ந்த கமலக்கண்ணன் (38) என்பவர் ஓட்டி வந்த காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சேலம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் தேர்தல் பறக்கும்படையினர் நடத்திய சோதனையில் சுமார் ரூ.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 9 கிலோ வெள்ளிக்கட்டிகளும் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story