ஈரோடு அருகே 2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை 3 பேரின் உடல்கள் மீட்பு
ஈரோடு அருகே 2 மகள்களுடன் வாய்க்காலில் குதித்து தாய் தற்கொலை செய்து கொண்டார். 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன.
ஈரோடு,
ஈரோடு மாவட்டத்தில் காலிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு உள்ளது. ஈரோடு அருகே குப்பிபாளையம் பகுதியில் செல்லும் வாய்க்கால் கரையோரமாக நேற்று மாலை 3 மணி அளவில் விவசாயி ஒருவர் நடந்து சென்றார். அப்போது வாய்க்காலில் 3 பெண்களின் உடல்கள் மிதந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த உடல்கள் வாய்க்கால் கரையோரமாக உள்ள முட்புதரில் சிக்கி இருந்தன. உடனடியாக அவர் ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது 3 உடல்களும் ஒரே துணியால் கட்டப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் உடல்களை போலீசார் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
2 மகள்களையும் ஒரு துணியால் தனது உடலில் கட்டிக்கொண்டு பெண் வாய்க்காலில் குதித்து தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அவர்கள் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்கள்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும், வாய்க்காலில் பிணம் மிதந்த தகவல் கிடைத்ததும் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு திரண்டனர். ஆனால் அவர்களும் இறந்தவர்கள் தங்களது பகுதியை சேர்ந்தவர்கள் இல்லை என்று தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து 3 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வாய்க்காலில் தண்ணீர் அதிகமாக செல்வதால் 3 பேரின் உடல்களும் குப்பிபாளையம் வரை தண்ணீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனால் இறந்தவர்கள் கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்பதால், அங்கும் போலீசார் சென்று 2 மகள்களுடன் தாய் மாயமாகி உள்ளாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.