தெள்ளை மலை கிராமத்திற்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


தெள்ளை மலை கிராமத்திற்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 28 March 2019 4:15 AM IST (Updated: 27 March 2019 10:23 PM IST)
t-max-icont-min-icon

தெள்ளை மலை கிராமத்துக்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுக்கம்பாறை, 

கணியம்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட துத்திக்காடு ஊராட்சி, தெள்ளை மலை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இந்த பகுதிக்கு இதுவரை தார்சாலையோ அல்லது சிமெண்டு சாலையோ அமைக்கப்படவில்லை.

எனவே அந்தப்பகுதி மக்கள் மலை கிராமத்தில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துத்திக்காடு கிராமத்திற்கு கரடுமுரடான பாதையிலேயே நடந்து செல்கின்றனர். பின்னர், அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு பஸ்களில் செல்கின்றனர். இதில் தேர்தல் நடக்கும் நேரங்களில், வேட்பாளர்கள் மட்டும் அந்த மலை கிராமங்களுக்கு நேரில் சென்று ஓட்டு சேகரிக்கின்றனர். ஆனால் அந்த மலை கிராம மக்கள் துத்திக்காடு கிராமத்திற்கு மிகவும் சிரமத்துடன் நடந்து சென்றே ஓட்டுப் போடுகின்றனர்.

வாகன வசதி கூட இல்லாத இந்த தெள்ளை மலை கிராம மக்கள், பல சிக்கல்களை தாண்டி வந்து ஓட்டுப்போடும் சூழல் உள்ளதால் வயதான சிலரால் ஓட்டுப்போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தெள்ளை மலை கிராம மக்கள் ஓட்டு போடுவதற்கு அந்த பகுதியிலேயே தனி வாக்குச்சாவடி மையம் அமைக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் பல ஆண்டு காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் தற்போது நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலாவது தெள்ளை மலை கிராமத்திற்கு தனி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்படுமா என்பது அந்த மலை கிராம வாசிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே தெள்ளை கிராமத்திற்கு தனியாக வாக்குச்சாவடி மையம் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Next Story