செங்கம் அருகே அடகு நகையை மீட்க சென்றவரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை


செங்கம் அருகே அடகு நகையை மீட்க சென்றவரிடம் ரூ.1¾ லட்சம் பறிமுதல் தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 28 March 2019 5:00 AM IST (Updated: 27 March 2019 10:35 PM IST)
t-max-icont-min-icon

செங்கம் அருகே அடகு நகையை மீட்பதற்காக விவசாயி கொண்டு சென்ற ரூ.1 லட்சத்து 80 ஆயிரத்துக்கு உரிய ஆவணம் இல்லை எனக்கூறி அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

செங்கம், 

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க திருவண்ணாமலை மாவட்டத்தில் 24 மணி நேரமும் பறக்கும்படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். செங்கம் தாலுகா பறக்கும் படையினர் செங்கம் அருகே பெங்களூரு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தர்மபுரியிலிருந்து புதுச்சேரிக்கு சென்ற காரை மறித்தனர். அதில் ஷோபா என்பவர் இருந்தார்.

அதிகாரிகள் சோதனை செய்தபோது அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 76 ஆயிரத்து 500 ரொக்கம் இருந்தது. அவர் கோடைகால சுற்றுலா செல்ல டிராவல்ஸ் நிறுவனத்திற்கு செலுத்துவதற்கு பணம் கொண்டு செல்வதாக அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆனால் அவரிடம் அதற்கான ஆவணம் இல்லை. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து செங்கம் தாசில்தார் பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர்.

அதேபோல் கோணாக்குட்டை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக தண்டராம்பட்டை அடுத்த தானிப்பாடியை சேர்ந்த விவசாயி தனகோட்டி (வயது 52) மோட்டார்சைக்கிளில் வந்தார். அவரை நிறுத்தி சோதனையிட்டபோது ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் இருந்தது.

அது குறித்து விசாரித்தபோது தனியார் வங்கியில் அடகு வைத்த நகையை மீட்பதற்காக இந்த பணத்தை கொண்டு செல்கிறேன் என தனகோட்டி கூறியுள்ளார். ஆனால் உரிய ஆவணம் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணத்தை செங்கம் தாசில்தார் பார்த்தசாரதியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். அப்போது துணை தாசில்தார்கள் துரைராஜ், தமிழரசி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். 2 பேரிடமும் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.4 லட்சத்து 56 ஆயிரத்து 500 கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story