பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி உள்பட 19 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு 22 மனுக்கள் நிராகரிப்பு


பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி உள்பட 19 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு 22 மனுக்கள் நிராகரிப்பு
x
தினத்தந்தி 28 March 2019 4:45 AM IST (Updated: 27 March 2019 10:43 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி உள்பட 19 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 22 மனுக்கள் நிராகரிக்கப்பட்டது.

பெரம்பலூர், 

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய ஜனநாயக கட்சி, டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்கனவே பெரம்பலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி சாந்தாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று முன்தினம் சரியான நேரத்திற்கு வராதது, ஆவணங்கள் முறையாக இல்லையென்று என்று கூறி நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செந்தில்குமாரின் வேட்பு மனுவினை தேர்தல் அதிகாரி வாங்காமல், நிராகரித்து விட்டார்.

பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தொகுதியின் தேர்தல் பொதுபார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி முன்னிலையில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான சாந்தா தலைமையில் நடைபெற்றது.

இதில் வேட்பு மனு தாக்கல் செய்த அரசியல் கட்சியினரின் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள், சுயேச்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது ஒவ்வொரு வேட்பாளரின் வேட்பு மனுவும் ஒன்றன் பின், ஒன்றாக தேர்தல் பொதுபார்வையாளர் மஞ்சுநாத் பஜன்ட்ரி மற்றும் தேர்தல் அதிகாரி சாந்தா ஆகியோர் பரிசீலனை செய்தனர். மொத்தம் 32 வேட்பாளர்கள் மூலமாக 41 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

வேட்பு மனுக்கள் பரிசீலனையின் முடிவில், போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாத மற்றும் ஒருமுறைக்கு மேல் தாக்கல் செய்த 13 பேரின் 22 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, தகுதியுடைய 19 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டது. இதில் அ.தி.மு.க. வேட்பாளர் சிவபதி, இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரிவேந்தர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் ராஜசேகரன், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சாந்தி, பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் முத்துலட்சுமி உள்பட மொத்தம் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

வேட்பு மனு பரிசீலனையில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான விஸ்வநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story