குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன், உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடையார்பாளையம்,
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட 4-வது வார்டு கோனார் தெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு 3-வது வார்டில் இருந்து அத்தியாவசிய தேவைகளுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக கோனார் தெருவிற்கு சரிவர குடிநீர் வினியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து அந்தப்பகுதி பொதுமக்கள் உடையார்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும், அதிகாரிகளால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினை நிலவி வருகிறது.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், உடனே குடிநீர் வினியோகம் செய்யக்கேட்டும் கோனார் தெரு மக்கள் கையில் காலிக்குடங்களுடன் நேற்று திடீரென்று திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த உடையார்பாளையம் போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் தரப்பில் எங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும், புதிதாக போர்வெல் அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு அதிகாரிகள், பேரூராட்சி நிர்வாகத்திடம் கலந்து ஆலோசித்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story