சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்பட 15 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு 10 மனுக்கள் தள்ளுபடி


சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்பட 15 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு 10 மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 27 March 2019 11:00 PM GMT (Updated: 27 March 2019 6:05 PM GMT)

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்பட 15 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டது. 10 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

அரியலூர், 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந்தேதி தொடங்கி, நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், நாம் தமிழர் கட்சி, நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் அரியலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயலட்சுமியிடம் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். மொத்தம் 25 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் குல்கர்னி முன்னிலையில் தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான விஜயலட்சுமி வேட்பு மனுக்களை பரிசீலனை செய்தார். இதில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனையின் இறுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரவி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சிவஜோதி உள்பட 15 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. போதிய ஆவணங்கள் தாக்கல் செய்யப்படாத 10 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

நாளை (வெள்ளிக்கிழமை) சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரை தவிர சுயேச்சை வேட்பாளர்கள் அனைவரும் அன்றைய தினம் வர வேண்டும். தேர்தலில் போட்டியிட விருப்பம் இல்லை என்று நினைப்பவர்கள் இன்று (வியாழக்கிழமை) வேட்பு மனுவை திரும்ப பெறலாம். வேட்பாளர்கள் இறுதி பட்டியல் நாளைக்குள் அதிகாரபூர்வமாக தேர்தல் ஆணையம் வெளியிடும் என்று தேர்தல் அதிகாரி விஜயலட்சுமி தெரிவித்தார்.

வேட்பாளர்களின் வேட்பு மனு பரிசீலனையில் மாவட்ட வருவாய் அதிகாரி பொற்கொடி, கோட்டாட்சியர் சத்தியநாராயணன் (அரியலூர்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, தேர்தல் தனி தாசில்தார் சந்திரசேகரன், அங்கீகரிக்கப்பட்ட கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Next Story