தள்ளாடும் வயதிலும் கொல்லன் பட்டறை தொழிலில் ஈடுபடும் முதியவர்கள் அரசு உதவி செய்ய கோரிக்கை


தள்ளாடும் வயதிலும் கொல்லன் பட்டறை தொழிலில் ஈடுபடும் முதியவர்கள் அரசு உதவி செய்ய கோரிக்கை
x
தினத்தந்தி 28 March 2019 3:45 AM IST (Updated: 28 March 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

தள்ளாடும் வயதிலும் கொல்லன் பட்டறை தொழிலில் ஈடுபடும் முதியவர்களுக்கு அரசு உதவி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரூர், 

மக்களின் வாழ்வில் இரும்பின் பயன்பாடு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். குண்டூசி முதல் பெரிய கப்பல் வரை இரும்பினாலே செய்யப்பட்டவை ஆகும். விவசாய தொழில், கட்டுமான தொழில், கிரில் பட்டறை தொழில் உள்ளிட்டவற்றில் பணிகள் செய்வதற்கான கருவிகள் இரும்பினால் செய்யப்பட்டன. அந்த வகையில் மண்வெட்டி, கடப்பாரை, வெட்டரும்பு, களைவெட்டி, குந்தாளம், கலப்பை கூர்முனை, கோடரி, அரிவாள், கத்தி, இரும்பு கதவின் கொண்டி உள்ளிட்டவை பெரிதும் புழக்கத்தில் இருந்தன. இதன் காரணமாக அந்த பொருட்களை தயாரிக்கவும், பழுதுபார்க்கவும் கொல்லன் பட்டறைகள் பரவலாக காணப்பட்டன.

நெருப்பில் போட்டு இரும்பு பொருட்களை வெப்பப்படுத்தி, பின்னர் சம்மட்டியால் அதனை அடித்து வளைத்து வலிமையேற்றி கொடுத்து கொல்லன் பட்டறை தொழிலாளர்கள் பரவலாக பிழைப்பு நடத்தினார்கள். ஆனால் தற்போது அந்த தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. ஏனெனில் தகிக்கும் தீச்ஜுவாலைக்குள் அமர்ந்து உடலை வருத்தி அந்த தொழிலில் உழைக்க வேண்டும், மேலும் நவீன உபகரணங்களின் வருகையால் போதிய வருமானம் கிடைப்பதில்லை உள்ளிட்டவை மூலக்காரணமாக இருக்கின்றன.

ஆனால் தள்ளாடுகிற வயதிலும் கூட உழைப்புக்கு முன்னுதாரணமாய், கரூர் லைட்அவுஸ் கார்னர் பழைய அமராவதி ஆற்று பாலத்தின் கீழ்புறத்தில் ஒரு சிறிய குடிசையினுள் 4 முதியவர்கள் சேர்ந்து தற்போதும் கூட கொல்லன் பட்டறை தொழிலை நடத்தி வருகின்றனர். கரூர், செட்டிபாளையம், மண்மங்கலம், தாந்தோன்றிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து விவசாயிகள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், லேத் பட்டறை உரிமையாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பணிக்கு அத்தியாவசியமான மழுங்கிப்போன இரும்பு பொருட்களை பழுது பார்த்து செல்கின்றனர். அதற்காக வேலைக்கு ஏற்றாற்போல் ரூ.100 முதல் ரூ.500 வரையில் கூலியாக அந்த முதியவர்கள் பெற்று கொள்கின்றனர். கரூர் அண்ணா நகரை சேர்ந்த சீனிவாசன் (வயது 63) தான் அந்த பட்டறையை நிர்வகித்து நடத்துகிறார். அவருடன் சேர்ந்து செல்லாண்டிபாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன் (65), ராஜூ (83), ஆறுமுகம் (60) ஆகியோர் வேலை செய்கின்றனர். தற்போது கோடை வெயிலின் காரணமாக பலரும் வெளியே செல்லவே அச்சப்படுவதுண்டு. ஆனால் அந்த முதியவர்களின் தொழிலே அனல் பறக்கும் தீச்ஜுவாலைக்குள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. நவீன எந்திரத்தில் கொடுத்து கடைந்து எடுப்பதை விட, கொல்லன் பழுதுபார்த்த இரும்பு பொருட்கள் நீண்ட நாள் உறுதி தன்மையுடன், பயன்பாட்டுக்கு இலகுவாகவும் இருப்பதாக விவசாயிகள் பலர் தெரிவித்தனர்.

கரூரில் 3-வது தலைமுறையாக கொல்லன் பட்டறை தொழிலில் ஈடுபடும் சீனிவாசனிடம் கேட்ட போது தெரிவித்ததாவது:-

வயது எனக்கு 60-ஐ தாண்டிய போதிலும் நெற்றி வியர்வை மண்ணில் சிந்தி உழைப்பதையே பெருமையாக கருதுகிறேன். எனக்கு பிறகு அடுத்த சந்ததியினர் இந்த தொழிலில் ஈடுபடுவார்களா? என்பது சந்தேகம் தான். இதனால் எனது கடைசிகாலம் வரை எனது கைத்தொழிலை மேற்கொள்வேன். ஆனால் தற்போது இந்த தொழில் நலிவடையும் நிலையில் இருக்கிறது. எனினும் பொதுமக்கள், வணிகர்கள், விவசாயிகளின் தேவையை கருத்தில் கொண்டு தான் வயது முதிர்ந்த போதிலும் இரும்பு அடித்து, தீயினுள் கிடந்து காய்கிறோம். முன்பு மாட்டு வண்டிகளின் அச்சு, இரும்பு பட்டை மற்றும் சில கருவிகளை செய்து கொடுத்தோம். தற்போது இரும்பு கருவிகளை செப்பனிடும் பணியை மட்டும் செய்கிறோம். குழி தோண்டுவது உள்ளிட்ட பணிகளுக்காகவும், கிணறு வெட்டுவதற்காகவும் முனை மழுங்கிய இரும்புகருவிகளை பலர் கொண்டு வந்து சரி செய்து செல்கின்றனர். எனவே கொல்லன் பட்டறை தொழிலை அழிவில் இருந்து மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நலிவடைந்த கொல்லன்பட்டறை தொழிலாளர்களை கண்டுபிடித்து மானியத்துடன் கடன் வழங்குவது, தொழில் செய்ய கட்டிடம் கட்டி கொடுப்பது, வீடில்லாதோருக்கு இலவச பட்டா வழங்குவது உள்ளிட்டவற்றை செய்து கொடுக்க அரசு நடவடிக்கை வேண்டும் என்பது தான் எங்களது விருப்பம் என்று தெரிவித்தார்.

Next Story