நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில், அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 10 பேரின் மனுக்கள் ஏற்பு - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேரின் மனு தள்ளுபடி
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் உள்பட 10 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 5 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
ஊட்டி,
நீலகிரி(தனி) நாடாளுமன்ற தொகுதியில் ஊட்டி, குன்னூர், கூடலூர் (தனி), மேட்டுப்பாளையம், அவினாசி(தனி), பவானிசாகர்(தனி) சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிக்கான வேட்பு மனுதாக்கல் கடந்த 19-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது.
நீலகிரி தொகுதியில் போட்டியிட அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம், பகுஜன் சமாஜ் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்பட 15 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்தனர். இதில் 9 சுயேச்சை வேட்பாளர்கள் அடங்குவார்கள்.
இந்த நிலையில் நேற்று நீலகிரி மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் வேட்புமனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது தேர்தல் பொது பார்வையாளர் உசன் லால், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ் உடன் இருந்தனர்.
அ.தி.மு.க. வேட்பாளர் மா.தியாகராஜன், தி.மு.க. வேட்பாளர் ஆ.ராசா, மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் வக்கீல் ராஜேந்திரன், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அசோக்குமார், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் (சுயேச்சை) எம்.ராமசாமி, சுயேச்சை வேட்பாளர்கள் அவினாசியை சேர்ந்த ஆறுமுகம், மஞ்சூர் அருகே கைகாட்டி பகுதியை சேர்ந்த சுப்ரமணி, கோவையை சேர்ந்த நாகராஜன், குன்னூர் அருகே எடப்பள்ளியை சேர்ந்த ராஜரத்தினம், ஊட்டி எல்க்ஹில் பகுதியை சேர்ந்த ராஜா ஆகிய 10 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
நாம் தமிழர் கட்சி சார்பில், ஊட்டி அருகே நஞ்சநாடு கக்கன்ஜி பகுதியை சேர்ந்த மணிமேகலை தாக்கல் செய்த வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. அ.தி.மு.க. சார்பில், மாற்று வேட்பாளராக குன்னூர் நகராட்சி முன்னாள் தலைவர் சரவணகுமார் வேட்புமனுவும் தள்ளுபடி ஆனது. சுயேச்சை வேட்பாளர்கள் கலைச்செல்வன், பந்தலூரை சேர்ந்த விஜயானந்தா கண்ணபிரான், காமராஜ் என மொத்தம் 5 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
Related Tags :
Next Story