கழிவுநீரால் விளைநிலம் பாதிப்பு சாயப்பட்டறையை மூடக்கோரி விவசாயிகள் சாலைமறியல்
சாயப்பட்டறை கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே சாயப்பட்டறையை மூடக்கோரி ஊத்துக்கோட்டையில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை அருகே உள்ள தாராட்சி கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் விவசாயிகள். இந்த கிராமத்தின் மையப்பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு தனியார் நிறுவனம் சாயப்பட்டறை தொடங்கியது. இதில் இருந்து வெளியேறும் கழிவுநீர் விளைநிலங்களில் பாய்வதாக கூறப்படுகிறது.
இதனால் பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் சாயப்பட்டறை உள்ள பகுதியில் கட்டப்பட்டுள்ள சில தொட்டிகள் மூடி இல்லாமல் திறந்து கிடக்கின்றன. அங்கிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும், தோல்நோய் பரவி வருவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இந்த நிலையில் சாயப்பட்டறை கழிவுநீரால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதை கண்டித்தும், சாயப்பட்டறையை மூட வலியுறுத்தியும் நேற்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஊத்துக்கோட்டை– சென்னை சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். ஊத்துக்கோட்டை போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, பிரதாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது சாயப்பட்டறை கழிவுகளை தூரமான பகுதிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக ஊத்துக்கோட்டை– சென்னை இடையே அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.