எந்த புதிய திட்டமும் தரவில்லை: புதுச்சேரியை பிரதமர் மோடி புறக்கணித்தார் நாராயணசாமி குற்றச்சாட்டு


எந்த புதிய திட்டமும் தரவில்லை: புதுச்சேரியை பிரதமர் மோடி புறக்கணித்தார் நாராயணசாமி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 28 March 2019 5:15 AM IST (Updated: 28 March 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரிக்கு எந்த ஒரு புதிய திட்டத்தையும் பிரதமர் மோடி தராமல் புறக்கணித்ததாக முதல்–அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.

புதுச்சேரி,

காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் உருளையன்பேட்டை மங்கலட்சுமி திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது:–

புதுவை வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம். புதுவையில் காங்கிரஸ் ஆட்சியில் ரங்கசாமி முதல்–அமைச்சராக இருந்தபோது நான் மத்திய மந்திரியாக இருந்தேன். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது புதுவையிலிருந்து வெளிமாநிலங்களுக்கு 11 ரெயில் விட்டோம். காரைக்காலுக்கு 7 ரெயில்கள் விடப்பட்டன.

அதுமட்டுமின்றி கேந்திர வித்யாலயா, என்.ஐ.டி. ஆகியவற்றை கொண்டு வந்தோம். விழுப்புரத்திலிருந்து புதுச்சேரி வழியாக நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. கிழக்கு கடற்கரை ரெயில் பாதை திட்டமும் காங்கிரஸ் ஆட்சியில்தான் அறிவிக்கப்பட்டது. இதற்கான ஆயத்த வேலைகளும் நடந்தன.

புதிய ரெயில்வே திட்டங்களினால் புதுவையில் சுற்றுலா வளர்ந்தது. மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்கும் என்றார் ரங்கசாமி. ஆனால் அதைப்பெற அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதுவையை பிரதமர் மோடி புறக்கணித்தார். புதுச்சேரிக்கு என எந்த ஒரு புதிய திட்டத்தையும் மோடி தரவில்லை.

ரங்கசாமி ஆட்சியில் இருந்தபோதுகூட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தரவில்லை. நாங்கள் போராடி அந்த திட்டத்தை பெற்றோம். ரோடியர், பாரதி, சுதேசி மில்கள் ரங்கசாமி ஆட்சிக்காலத்தில் மூடப்பட்டன. கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு 2 அமைச்சர் பதவி தருவதாக ரங்கசாமி ஜெயலலிதாவை ஏமாற்றினார். ஆனால் இப்போது அவர்கள் கூட்டு சேர்ந்துள்ளனர்.

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.


Next Story