புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அ.தி.மு.க. துணை நிற்கும் தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி


புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அ.தி.மு.க. துணை நிற்கும் தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி
x
தினத்தந்தி 28 March 2019 4:30 AM IST (Updated: 28 March 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க அ.தி.மு.க. துணை நிற்கும் என்று தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

புதுச்சேரி,

நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் புதுவை தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் டாக்டர் நாராயணசாமி, மற்றும் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நெடுஞ்செழியன் ஆகியோரை ஆதரித்து தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று புதுவையில் பிரசாரம் செய்தார்.

புதுவை மாநில எல்லையான மதகடிப்பட்டு மற்றும் வில்லியனூர் ஏழை மாரியம்மன் கோவில், புதுவை ராஜீவ்காந்தி சிலை சதுக்கம், மரப்பாலம் சந்திப்பு, தவளக்குப்பம் ஆகிய இடங்களில் திறந்த வாகனத்தில் நின்றபடி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

நாடாளுமன்ற தேர்தலில் புதுவை தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி சார்பில் நாராயணசாமியும், தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நெடுஞ்செழியனும் வெற்றி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தங்களின் வாக்குகளை அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் அவர்களை வெற்றிப்பெற செய்ய வேண்டும்.

அவர்கள் 2 பேரையும் தேர்வு செய்தால் இந்த பகுதியில் இருக்கிற பல்வேறு தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இந்த பகுதிகளில் இருக்கின்ற பிரச்சினைகளையெல்லாம் களைவதிலும் நல்ல உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

புதுவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை புதுவைக்கு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்பதுதான். அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை வெற்றி பெறச்செய்தால் புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத்தர இவர் உறுதியாக செயல்படுவார். அதற்கு அ.தி.மு.க. துணை நின்று முழு முயற்சி எடுத்து செயல்படும். புதுச்சேரியில் கடந்த 3 ஆண்டுகளாக காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர்கள் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

மக்களுடைய தேவைகளையும், மாநிலத்துக்கு கிடைக்கக்கூடிய தொலைநோக்கு திட்டங்களையும் பெறுவதில் அரசு அக்கறை காட்டவில்லை. ஏதோ ஒரு நாடகம் நடத்துவதுபோல ஆளுங்கட்சி நடந்து கொண்டு இருக்கிறது. நாங்கள் அதனை பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றோம். நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் புதுவையில் ஆட்சி மாற்றம் வரும். இங்கு ஒரு நல்ல ஆட்சி, நிலையான ஆட்சி, மக்களின் தேவைகளை தீர்ப்பதற்கான ஆட்சி மலரும். நீங்கள் அனைவரும் நமது வெற்றி வேட்பாளர்களுக்கு ஜக்கு சின்னத்தில் வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக புதுவை வந்த தமிழக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாநில எல்லையான மதகடிப்பட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி, கோகுலகிருஷ்ணன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், சுகுமாறன், கோபிகா, முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர், அ.தி.மு.க. முன்னாள் மாநில செயலாளர் நடராஜன், முன்னாள் வாரிய தலைவர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர்.


Next Story