உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்ட அலுமினிய பாத்திரங்கள், ஆடைகள் பறிமுதல்
உரிய ஆவணங்கள் இன்றி வேன் மற்றும் காரில் கொண்டு வரப்பட்ட அலுமினிய பாத்திரங்கள், ரெடிமேட் ஆடைகளை தேர்தல் பறக்கும் படையினர், போலீசார் பறிமுதல் செய்தனர்.
காலாப்பட்டு,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் புதுவை மாநில எல்லையில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தேர்தல் அலுவலர்கள், வருவாய்த்துறையினர், போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் கொண்ட குழுவினர் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
காலாப்பட்டு அருகே உள்ள கனகசெட்டிக்குளம் சோதனை சாவடி அருகே நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அதிகாரி தனபால் தலைமையில் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து புதுச்சேரி வந்த ஒரு வேனை மறித்து சோதனை செய்ததில், 271 அலுமினிய பாத்திரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக வேனை ஓட்டிவந்த லாஸ்பேட்டையை சேர்ந்த அம்பிகாபதியிடம் விசாரித்தபோது, உரிய ஆவணங்கள் இன்றி அலுமினிய பாத்திரங்கள் எடுத்துவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் புதுவை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.82 ஆயிரம் ஆகும்.
காலாப்பட்டு போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் மற்றும் போலீசார் கனகசெட்டிக்குளம் எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சென்னையில் இருந்து புதுவை வந்த காரை வழிமறித்து சோதனை செய்தபோது, அதில் டி.சர்ட், சட்டை உள்பட 340 ரெடிமேட் ஆடைகள் இருந்தன.
இதுபற்றி காரில் வந்த சென்னை பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பாரத், டிரைவர் கவியரசன் ஆகியோரிடம் போலீசார் விசாரித்தனர். இந்த ஆடைகளை எடுத்து வருவதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதன் மதிப்பு ரூ. ஒரு லட்சத்து 2 ஆயிரம் ஆகும்.