தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் மணப்பாறை மாட்டுச்சந்தையில் வியாபாரம் கடும் பாதிப்பு பணத்தை பறிமுதல் செய்வதை கைவிட கோரிக்கை
தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் மணப்பாறை மாட்டுச்சந்தையில் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தாங்கள் கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்வதை கைவிட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ்பெற்ற மாட்டுச்சந்தை உள்ளது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன் கிழமை மதியம் வரை இந்த சந்தை நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள், விவசாயிகள் இங்கு வந்து தங்களுக்கு தேவையான மாடுகளை வாங்கிச் செல்வார்கள். வண்டிமாடு, உழவு மாடு, ஜெர்சி மாடு, எருமை, நாட்டுப்பசு, கறவை மாடு, பூரணி, ஜல்லிக்கட்டு காளைகள் என்று பலவகை மாடுகள் இங்கு விற்பனைக்கு வரும்.
இந்தநிலையில் தமிழகத்தில் வருகிற 18-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் வாக்காளர்களுக்கு, பணம், பரிசுப் பொருட்கள் உள்ளிட்டவைகளை கொடுப்பதை தடுத்திடும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஒரு நபர் ரூ.50 ஆயிரத்துக்கு மேற்பட்ட தொகையை உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச்செல்லக்கூடாது என்றும், அதை மீறி எடுத்து சென்றால் அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதற்காக நிலையான கண் காணிப்பு குழு, பறக்கும் படை என்று பல்வேறு குழுக்களை தேர்தல் ஆணையம் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகிறார்கள். இவ்வாறு சோதனை செய்யும் போது, மாடு வாங்க எடுத்து வரப்படும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துவிடுகிறார்கள். இதனால் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்குவதற்காக பணத்தை வியாபாரிகளால் எடுத்துவர முடிவதில்லை. இதன்காரணமாக இந்த வாரம் நடந்த சந்தையின் போது, மாடுகளின் விற்பனை மிகவும் குறைந்து விட்டது.
ஒரு நல்ல நிலையில் உள்ள கறவை மாடு வாங்க வேண்டும் என்றாலும் அல்லது வண்டி மாடு, ஜல்லிக்கட்டு காளை உள்ளிட்டவைகள் வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு குறைந்தது ரூ.70 ஆயிரத்திற்கு மேல் தேவைப்படும். அப்படி இருக்கும் போது, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்துச் செல்லும் போது அவற்றை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து விடுகிறார்கள்.
இதனால் மாடுகள் வாங்க வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் பணத்தை எடுத்து வர முடிவதில்லை. அதுபோல் மாடுகளை விற்ற பணத்தையும் வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவதில்லை. நேற்று முன்தினம் கூட மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு மாடுகளை வாங்க வந்த 2 வியாபாரிகளிடம் இருந்து ரூ.4 லட்சத்து 20 ஆயிரத்தை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த வியாபாரிகள் எந்த ஆவணங்களை கொடுத்து பணத்தை மீட்பது என்று தெரியாமல் வேதனையோடு திரும்பிச் சென்றனர். தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மிகுந்த வேதனைக்கு ஆளாகியுள்ளனர். இதனால் மணப்பாறை மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வாங்க மற்றும் விற்க வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் வருகை குறைந்து விட்டது.
இதன்காரணமாக வழக்கமாக ரூ.3 கோடி முதல் ரூ.7 கோடி வரை மாடுகள் விற்பனையாகும் இந்த சந்தையில், இந்த வாரம் ரூ.1 கோடி முதல் ரூ.2 கோடி வரை மட்டுமே மாடுகள் விற்பனை ஆனது. தேர்தல் அதிகாரிகளின் கெடுபிடியால் தான் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துவர முடிவதில்லை.
மாடுகள் வாங்க எப்படி ஆவணங்களை கொண்டுவரமுடியும்? மாடுவிற்ற பணத்துக்கு ரசீது எப்படி போட்டு கொடுக்க முடியும்? என்று வியாபாரிகளும், விவசாயிகளும் கேள்வி எழுப்பி உள்ளனர். எனவே மணப்பாறை மாட்டுச்சந்தை நாளில் மாடுகள் வாங்க வரும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளிடம் பணம் பறிமுதல் செய்வதை தேர்தல் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள் ளனர்.
Related Tags :
Next Story