கொடைக்கானலில் அழிந்து வரும் அவகோடா மரங்களை பாதுகாக்கக்கோரி வழக்கு மத்திய, மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
கொடைக்கானலில் பூஞ்சை தாக்குதலால் அழிந்து வரும் அவகோடா மரங்களை பாதுகாக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மதுரை,
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை சேர்ந்த கோகுலகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது–
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் அதிக அளவில் அவகோடா, வெண்ணைப்பழ மரங்கள் உள்ளன. இந்த மரங்களில் விளையும் பழங்கள் மருத்துவ குணம் கொண்டவை. இந்த பழங்களுக்கு அதிக மவுசு உண்டு. கொடைக்கானல், பழனி பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் அவகோடா, வெண்ணைப்பழ மரங்கள் பயிரிடப்பட்டு உள்ளன. பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, பழம்புத்தூர், பண்ணைக்காடு, பெருமாள் மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஏராளமான அவகோடா மரங்கள் உள்ளன. இந்த பழங்கள் மார்பக புற்றுநோய், ரத்தக்குழாய் அடைப்பு, அதிக கொழுப்பு போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
அவகோடா, வெண்ணைப்பழ மரங்களை நம்பி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் இருக்கிறது. இந்த பழங்களில் மருத்துவ குணம் உள்ளதால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
சமீபகாலமாக, ஒருவிதமான பூஞ்சை தாக்குதலுக்கு உள்ளான இந்த மரங்கள் பட்டுப்போய் வருகின்றன. இதனால் மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், இந்த மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். எனவே இதை தடுக்க, உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் நீலமேகம், முகமது ரஸ்வி ஆகியோர் ஆஜராகி, “அவக்கோடா மரங்களில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மலைப்பகுதிகளில் விவசாய பயிர்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க வேண்டும். அவகோடா மரங்களை சிறந்த முறையில் வளர்த்து, உற்பத்தியைப் பெருக்கவும், புதிய ரகங்களை அறிமுகப்படுத்தவும், அவற்றின் பூர்வீக பகுதிகளான மெக்சிகோ உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வழிமுறைகளை அறிந்து விவசாயிகளுக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும். உற்பத்தியை பெருக்கும் வகையில் விவசாயத்தை மேம்படுத்த தேவையான வழிகாட்டுதல்களையும், மரக்கன்றுகள் வழங்கவும் உத்தரவிட வேண்டும்“ என்று வாதாடினார்.
விசாரணை முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.