மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசு உயிருடன் மீட்பு
மணப்பாறை அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
மணப்பாறை,
இதுபற்றிய விவரம் வருமாறு:-
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டி நடுக்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரஞ்சித். இவர் பசு ஒன்றை வளர்த்து வருகிறார். தினமும் அந்த பசுவை மேய்ச்சலுக்காக தோட்டத்தில் அவிழ்த்து விடுவது வழக்கம். அதுபோல் நேற்று காலை அந்த பசுவை மேய்ச்சலுக்காக விவசாயி ரஞ்சித் தனது தோட்டத்தில் அவிழ்த்து விட்டிருந்தார்.
அப்போது தோட்டத்தில் இருந்த சுமார் 20 அடி ஆழ கிணற்றில் அந்த பசு தவறி விழுந்து விட்டது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் பசுவின் உடலில் அடிபட்டது. இதனால் வலியால் அந்த பசு சத்தம்போட்டது. இதை கேட்டு தோட்டத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்த போது, பசு கிணற்றுக்குள் தவறி விழுந்து கிடந்தது தெரியவந்தது.
உடனே அவர்கள் அந்த மாட்டை மீட்க முயற்சி செய்தனர். ஆனால் முடியவில்லை. கிணற்றுக்குள் தவறி விழுந்ததாலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் பசு மிகவும் சோர்வடைந்து விட்டது. இதை தொடர்ந்து மணப்பாறை தீயணைப்பு நிலையத்துக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். மணப்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி கணேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள், கிணற்றுக்குள் இறங்கி, பொதுமக்கள் உதவியுடன் அந்த பசுவை கயிறு கட்டி உயிருடன் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மாடு சோர்வாக இருந்ததால் அதன்மீது தண்ணீர் ஊற்றப்பட்டு குளிர்விக்கப்பட்டது. பின்னர் அது உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story