பாப்பாரப்பட்டி அருகே வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்


பாப்பாரப்பட்டி அருகே வாகன சோதனையில் ரூ.1½ லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 28 March 2019 3:45 AM IST (Updated: 28 March 2019 2:04 AM IST)
t-max-icont-min-icon

பாப்பாரப்பட்டி அருகே வாகன சோதனையில் சரக்கு வேனில் எடுத்து சென்ற ரூ.1½ லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பென்னாகரம்,

தர்மபுரி நாடாளுமன்ற தேர்தல் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர்(தனி) சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா? விடுதிகள், திருமண மண்டபங்களில் பரிசுப்பொருட்கள் பதுக்கி வைக்கப்படுகிறதா? வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வாகனங்களில் பணம் கடத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாப்பாரப்பட்டி சுப்பிரமணிய சிவா மண்டபம் அருகில் பறக்கும் படை அலுவலர் மகேஷ்குமார் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாகவந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.1½ லட்சம் எடுத்து செல்வது தெரியவந்தது. இதுதொடர்பாக வேனை ஓட்டி வந்த பிக்கிலியை சேர்ந்த ரங்கநாதன் மகன் முருகன் (வயது22) என்பவரிடம் பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது தேர்தல் விதிமுறையை மீறி உரிய ஆவணம் இல்லாமல் சரக்கு வேனில் பணம் எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து சென்ற ரூ.1½லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் காண்பித்து பணத்தை பெற்று செல்லுமாறு பறக்கும் படையினர் தெரிவித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பென்னாகரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தேன்மொழியிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

Next Story