நிலக்கோட்டை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 52 பேரின் வேட்புமனு ஏற்பு - 31 மனுக்கள் தள்ளுபடி
நிலக்கோட்டை, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்பட 52 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. 31 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
திண்டுக்கல்,
தமிழகத்தில், நாடாளுமன்ற தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 19-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை நிலக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். மொத்தம் 41 பேர் வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் தேர்தலை நடத்தும் அலுவலர் ஜீனத்பானு தலைமையில் நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி, தி.மு.க. வேட்பாளர் சவுந்தரபாண்டியன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சங்கிலிபாண்டி உள்பட 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அ.தி.மு.க., தி.மு.க.வின் மாற்று வேட்பாளர்கள் உள்பட 20 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சுயேச்சை வேட்பாளரான தேன்மொழி தாக்கல் செய்த வேட்புமனுவில் தவறு இருப்பதாக ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. அந்த வேட்புமனு விசாரணையில் உள்ளது.
அதேபோல் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க. உள்பட 26 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கண்ணகி தலைமையில் நடந்தது.
அப்போது அ.தி.மு.க. வேட்பாளர் லோகிராஜன், தி.மு.க. வேட்பாளர் மகாராஜன், அ.ம.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் உள்பட 18 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அ.தி.மு.க, தி.மு.க. மாற்று வேட்பாளர்கள், நாம் தமிழர் கட்சியின் மாற்று வேட்பாளர் மற்றும் 2 சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்காக அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் உள்பட 17 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயப்பிரித்தா தலைமையில் நேற்று நடந்தது. இதில் அ.தி.மு.க., தி.மு.க., அ.ம.மு.க., நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 14 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளின் மாற்று வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர் அன்னகாமு உள்பட 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுக்கள் வாபஸ் பெற நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாளாகும். அன்று மாலையில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அப்போது சுயேச்சைகளுக்கான சின்னங்களும் ஒதுக்கப்படும்.
Related Tags :
Next Story