வள்ளியூர் - சிவகிரியில் தேர்தல் பறக்கும் படையிடம் ரூ.2.44 லட்சம் சிக்கியது
வள்ளியூர், சிவகிரியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் சிக்கியது.
வள்ளியூர்,
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் சப்ளை செய்வதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வள்ளியூர் ரெயில்வே கேட் அருகே தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் ராஜதுரை தலைமையில், அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தினர். விசாரணையில், வள்ளியூர் அருகே சீலாத்திகுளத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்க்கும் முருகவேல் என்பதும், அவரிடம் ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 200 ரூபாய் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பணத்திற்கான ஆவணங்களை அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அவரிடம் பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லை. உடனே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து, ராதாபுரம் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகனிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த பணம் ராதாபுரம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.
சிவகிரி அருகே திருமலைநாயக்கன் புதுக்குடியில் தென்காசி- மதுரை தேசிய நெடுஞ்சாலை சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்புக்குழு தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் இருந்து விருதுநகர் மாவட்டம் சிவகாசி நோக்கி வேகமாக சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் ரூ.80 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து சிவகிரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
Related Tags :
Next Story