தேர்ச்சி செய்ய வைப்பதாக கூறி மாணவர்களிடம் பணமோசடி கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் கைது
தேர்ச்சி செய்ய வைப்பதாக கூறி மாணவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
மும்பை,
தேர்ச்சி செய்ய வைப்பதாக கூறி மாணவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்த என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
என்ஜினீயரிங் மாணவர்கள்
மும்பை காட்கோபர் மற்றும் விக்ரோலி பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் தானே மாவட்டம் அசன்காவில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். இவர்கள் செமஸ்டர் தேர்வில் தோல்வி அடைந்தனர்.
இந்தநிலையில், அவர்களிடம் அந்த கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வந்த சகாப்பூரை சேர்ந்த சுசில் செபாலே என்பவர் மாணவர்கள் 3 பேரையும் தேர்வில் தேர்ச்சி செய்ய வைப்பதாக கூறி அவர்களிடமிருந்து தாக்குர்லியை சேர்ந்த தனது நண்பர் ராகுல் கவன்டே என்பவர் மூலம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை வாங்கி இருக்கிறார். இதற்காக மாணவர்களை மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க கூறியிருக்கிறார்.
2 பேர் கைது
இதனை நம்பி மாணவர்கள் 3 பேரும் தோல்வி அடைந்த பாடங்களுக்கு மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித்தனர். ஆனால் மாணவர்கள் 3 பேரும் மீண்டும் தோல்வி அடைந்தனர்.
இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை கல்லூரி பேராசிரியரிடம் திருப்பி கேட்டனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்து விட்டார். மேலும் அந்த கல்லூரியில் இருந்து விலகி வேறொரு கல்லூரியில் பணியில் சேர்ந்தார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுகுறித்து காட்கோபர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் சுசில் செபாலே மற்றும் அவரது நண்பர் ராகுல் கவன்டே ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story