நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - கடலூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


நாடாளுமன்ற தேர்தலில், தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் - கடலூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 28 March 2019 5:00 AM IST (Updated: 28 March 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்று கடலூரில் நடந்த பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

கடலூர், 

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார்.

அந்த வகையில் நேற்று காலை விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் எல்.கே.சுதீசை ஆதரித்து சங்காரபுரம், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொண்டார். தொடர்ந்து அவர் உளுந்தூர் பேட்டை, விழுப்புரம் ஆகிய இடங்களில் பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து ஓ.பன்னீர்செல்வம் புதுச்சேரி, ரெட்டிச்சாவடி வழியாக நேற்று இரவு கடலூர் உழவர் சந்தை முன்பு வந்தார். அங்கு அவர் திறந்த வேனில் நின்றபடி பா.ம.க. வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமியை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணி வலுவான வெற்றி கூட்டணியாகும். கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் உங்களின் நல் ஆதரவை பெற்று எம்.பி. ஆகி நாடாளுமன்றத்துக்கு சென்றால் இந்த பகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பார்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சி இந்த நாட்டை ஆண்டபோது என்னென்ன கொடுமைகள் நிகழ்த்தப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல தொலைநோக்கு திட்டங்களை நீங்கள் அனுபவித்து வருகிறீர்கள். ஆனால் தி.மு.க. கூட்டணியினர் நாட்டை பற்றியும், நாட்டின் ஜீவதார உரிமைகளை பற்றியும் கவலைப்படாமல் மீண்டும் மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கலாம் என்று வந்து இருக்கிறார்கள்.

காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி சுமார் 10 ஆண்டு ஆட்சி செய்த போது தமிழக மக்களின் நலனுக்காக எந்தவொரு தொலைநோக்கு திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. காவிரி பிரச்சினைக்காக உச்ச நீதிமன்றத்தில் சட்டபோராட்டம் நடத்தி, காவிரி நடுவர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. ஆனால் ஆட்சியில் இருந்த தி.மு.க.-காங்கிரஸ் இதை செய்யவில்லை.

இலங்கை போர்

இலங்கை தமிழர்கள் சமஉரிமை கேட்டபோது, இலங்கையை ஆண்ட ராஜபக்சே அதற்கு மறுப்பு தெரிவித்தார். அதன் பிறகு 2009-ல் போர் நடைபெற போகிறது என்று அப்போது ஆட்சி செய்த காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசுகளுக்கு உளவுத்துறை மூலம் தகவல் தெரிந்தும், அவர்கள் போரை நிறுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.

அந்த போரில் பொழிந்த குண்டு மழையில் பெண்கள், குழந்தைகள் என 4 லட்சம் இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 5 லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவை எல்லாவற்றுக்கும் அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி தான் காரணம்.

தொலைநோக்கு திட்டங்கள்

தமிழகத்தை தலைசிறந்த மாநிலமாக உருவாக்குவதற்காக ஜெயலலிதா பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை மக்களுக்கு நேரடியாக கிடைக்க செய்தார். அதன்படி விலையில்லா சைக்கிள், மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, திருமண உதவித்தொகையுடன் தாலிக்கு தங்கம், பேறுகால உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று 2016-ம் ஆண்டு ஜெயலலிதா அறிவித்தார். இந்த திட்டத்தை தற்போதுள்ள அ.தி.மு.க. அரசு செயல்படுத்தி வருகிறது.

பகிர்ந்து கொண்டால் பசி தீரும் என்று ஜெயலலிதா அடிக்கடி சொல்வது போல், இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு பாதி இடங்களை பகிர்ந்து கொடுத்துள்ளோம். தர்மத்தின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்றும், எதிர்கால இந்தியாவை வலிமையான பிரதமர் ஆளவேண்டும் என்றும் முடிவு செய்து இந்த கூட்டணியை அமைத்திருக்கிறோம்.

பாடம் புகட்டுவார்கள்

எதிர் தரப்பினர் அதே பழைய கூட்டணி. தி.மு.க.வினர் எங்கு பார்த்தாலும் அடிதடி, நில அபகரிப்பு, பிரியாணி கடையில் சண்டை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அதனால் தி.மு.க. கூட்டணிக்கு இந்த தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

தற்போது தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மாயையை உருவாக்கி வருகிறார். அது வெறும் மாயை தான். மதுரையில் பத்திரிகை அலுவலகத்தை தீயிட்டுக் கொளுத்தியது தி.மு.க. தான். தற்போது அதற்கு தீர்ப்பு வந்துள்ளது.

நயவஞ்சக கூட்டணி அமைத்து மக்களை சந்திக்க வருகிறார்கள். அவர்களிடம் நாட்டை ஒப்படைக்க நாங்கள் தயாராக இல்லை என்று மக்கள் கூறி வருகிறார்கள். அவர்களுக்கு மக்கள் சரியாக பாடம் புகட்ட வேண்டும். இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி இருக்க கூடாது என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

அமைதி பூங்காவாக...

சிறுபான்மை மக்களை பாதுகாத்து முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தினார். கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் சென்று வரவும், முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளவும் நிதி உதவி வழங்கினார். தமிழகம் அமைதி பூங்காவாக திகழ்கிறது.

சுனாமி, புயல், வெள்ளம் என பல்வேறு இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு வாழும் கடலூர் மாவட்ட மக்களாகிய நீங்கள் வைர நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறீர்கள். இந்த மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு ரூ.2 கோடியே 15 லட்சம் செலவில் முழு உருவ வெண்கல சிலையுடன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. அவரது உருவ படத்தை சட்டசபையில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ரூ.1 கோடியே 41 லட்சம் செலவில் சுவாமி சகஜானந்தாவுக்கு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் அருகே கம்மியம்பேட்டையில் ரூ.22 கோடியே 44 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. மேல்குமாரமங்கலம், மேலப்பாளையூரை இணைக்கும் வகையில் பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.30 கோடியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இன்னும் பல திட்டங்கள் இந்த பகுதிக்கு வந்து சேர இருக்கிறது. எனவே இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமிக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து அவரை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத், வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி ஆகியோர் உடன் இருந்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சொரத்தூர் ராஜேந்திரன், மாநில மருத்துவர்அணி துணை பொதுச்செயலாளர் டாக்டர் சீனுவாசராஜா, நகர செயலாளர் குமரன், மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் சேவல்குமார், கடலூர் ஒன்றிய செயலாளர் பழனிசாமி, துணை செயலாளர் ஜே.கண்ணன், மீனவர் அணி செயலாளர் கே.என்.தங்கமணி, பா.ம.க. மாநில துணைப்பொதுச் செயலாளர் பழ.தாமரைக்கண்ணன், மாவட்ட செயலாளர் சண்.முத்துகிருஷ்ணன், தமிழ் மாநில காங்கிரஸ் நகர தலைவர் ரகுபதி, பா.ஜ.க. மாவட்ட துணை தலைவர் குணா என்கிற குணசேகரன் மற்றும் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., பா.ஜ.க., புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து பரங்கிப்பேட்டை, புவனகிரியில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகரை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் செய்தார்.

Next Story