வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் சுயேச்சை வேட்பாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் - கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு


வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் சுயேச்சை வேட்பாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் - கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு
x
தினத்தந்தி 28 March 2019 4:29 AM IST (Updated: 28 March 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் சுயேச்சை வேட்பாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதனால் கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

கோவை,

கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மனு தாக்கல் செய்தனர். அதன்படி வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி வரை பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மக்கள் நீதி மய்யம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் உள்பட 38 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் பார்வையாளர் ரேணு ஜெய்பால், மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் நேற்று பரிசீலனை செய்யப்பட்டன. இதில் நூர்முகமது, யுவராஜ், உமர் அலி, சுந்தர்ராஜ், மணி ஆகிய சுயேச்சை வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதுபற்றிய தகவல் அந்தந்த சுயேச்சை வேட்பாளர்களுக்கு எழுத்து பூர்வமாக அளிக்கப்பட்டது.

இதைப்பார்த்து சுயேச்சை வேட்பாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் தங்கள் வேட்பு மனுக்கள் வேண்டுமென்றே தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. தகுந்த காரணமில்லாமல் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன என்று கூறியவாறு கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் கேட் முன்பு சாலையில் அமர்ந்தனர். அவர்கள் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினார்கள்.இதனால் கலெக்டர் அலுவலகத்துக்குள் யாரும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது ஒரு சுயேச்சை வேட்பாளரான மணி என்பவரின் மகன் தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் கலெக்டர் அலுவலகம் முன்பு படுத்தார். பின்னர் சாலையில் உருண்டு போராட்டம் நடத்தினார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் உடனடியாக ஓடிவந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக கலெக்டரிடம் பேசி தீர்வு காணலாம் என்று போலீசார் கூறினார்கள். ஆனால் அதை சுயேச்சை வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்ளாமல் ‘வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ததே கலெக்டர் தான்’ என்று ஆவேசத்துடன் கூறினார்கள். அதைத் தொடர்ந்து சுயேச்சை வேட்பாளர்கள் சிறிது நேரம் கோஷங்கள் எழுப்பிய பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story