ஓமலூரில் கூட்டுறவு ஊழியரிடம் ரூ.7 லட்சம் திருட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு


ஓமலூரில் கூட்டுறவு ஊழியரிடம் ரூ.7 லட்சம் திருட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்ற மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 March 2019 3:45 AM IST (Updated: 28 March 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

ஓமலூரில் கூட்டுறவு கடன் சங்க ஊழியரிடம் ரூ.7 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடிக்கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

ஓமலூர், 

சேலம் மாவட்டம், ஓமலூர் அடுத்த ஆட்டுக்காரனூர் அருகே உள்ள ஆலக்கரடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 47). இவர் பச்சினம்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் காசாளராக வேலை செய்து வருகிறார்.

இவருடைய மகன் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் திட்டப்பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பகலில், தனது மகனுக்கு சொந்தமான ரூ.7 லட்சத்தை ஓமலூரில் உள்ள ஒரு வங்கி ஒன்றில் கூட்டுறவு ஊழியர் ஜெகநாதன் எடுத்தார். அந்த பணத்தை தனது மொபட்டில் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்தார். பின்னர் அங்கிருந்து வீட்டுக்கு மொபட்டில் சென்றார். ஓமலூர் தாலுகா அலுவலகம் அருகே உள்ள அங்காளம்மன் கோவில் பகுதியில் அவர் வண்டியை நிறுத்தினார். அங்கு தர்பூசணி பழம் வாங்குவதற்காக மொபட்டில் இருந்து இறங்கி சென்றார்.

இதை நோட்டமிட்ட மர்ம ஆசாமி ஒருவர், அந்த மொபட்டின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியை திறந்து ரூ.7 லட்சம் வைத்திருந்த பணப்பையை திருடினார். இதனிடையே தனது பணத்தை மர்ம ஆசாமி திருடுவதை தர்பூசணி கடையில் நின்று கொண்டு இருந்த ஜெகநாதன் பார்த்தார்.

உடனே அவர், ‘திருடன், திருடன்‘ என்று சத்தம் போட்டபடி அங்கே ஓடிவந்து அந்த மர்ம ஆசாமியை மடக்கி பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள், அந்த ஆசாமி அவரை தள்ளிவிட்டு விட்டு, பணத்துடன் அங்கு காத்திருந்த மற்றொரு மர்ம ஆசாமியுடன் மோட்டார் சைக்கிளில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டார்.

மொபட்டில் கொண்டு வந்த ரூ.7 லட்சம் திருட்டு போனது குறித்தும், திருடர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வது குறித்தும் அவர் ஓமலூர் போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, வங்கி மற்றும் சம்பவம் நடந்த இடம் வரை உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story