உள்ளாடைக்குள் மறைத்து கடத்தல் சென்னை விமானநிலையத்தில் ரூ.46 லட்சம் தங்கம் பறிமுதல் தாய்லாந்து பெண் கைது


உள்ளாடைக்குள் மறைத்து கடத்தல் சென்னை விமானநிலையத்தில் ரூ.46 லட்சம் தங்கம் பறிமுதல் தாய்லாந்து பெண் கைது
x
தினத்தந்தி 29 March 2019 3:30 AM IST (Updated: 28 March 2019 10:44 PM IST)
t-max-icont-min-icon

தாய்லாந்தில் இருந்து சென்னைக்கு உள்ளாடைக்குள் மறைத்து ரூ.46 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை கடத்தி வந்த பெண்ணை விமானநிலையத்தில் அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது தாய்லாந்தில் இருந்து விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது தாய்லாந்தில் இருந்து சுற்றுலா விசாவில் வந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த கைசோன் (வயது 25) என்ற பெண் பயணி மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் அவரை நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவுமே இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த பெண் உள்ளாடைக்குள் மறைத்து 2 தங்க கட்டிகளை கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.46 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 385 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அப்போது விமான நிலையத்திற்கு வெளியே தங்க கட்டிகளை வாங்கி செல்ல வாலிபர் ஒருவர் வந்திருப்பதாக அந்த பெண் கூறினார். இதைத்தொடர்ந்து அந்த பெண்ணை வெளியே அனுப்பி சுங்க இலாகா அதிகாரிகள் பின்தொடர்ந்து சென்றனர்.

அப்போது விமான நிலையத்தின் வெளியே கார்கள் நிறுத்துமிடம் பகுதியில் தாய்லாந்து பெண்ணிடம் இருந்து கடத்தல் தங்கத்தை வாங்க வந்த சண்டிகாரை சேர்ந்த லவ்லின் கசப்(32) என்பவரை சுங்க இலாகா அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். இதைத்தொடர்ந்து பெண் உள்பட 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story