ஓமலூர் அண்ணாமலையார் கோவில் மண்டபத்தில் திடீர் தீ
ஓமலூரில் அண்ணாமலையார் கோவில் மண்டபத்தில் நேற்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
ஓமலூர் கடை வீதியில் பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே கோவிலுக்கு சொந்தமான வணிக வளாகமும், அதன் மேல்மாடியில் கோவிலுக்கு அன்னதான மண்டபம், சமையல் கூடமும் உள்ளது. இந்த கோவிலில் நேற்று தேய்பிறை அஷ்டமியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி இந்த கோவிலுக்கு சொந்தமான அன்னதான மண்டபத்தில் உள்ள சமையல் கூடத்தில் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல், சுண்டல் தயாரிக்கப்படுவது வழக்கம்.
அதன்படி நேற்று மாலை, சேலம் கருப்பூர் அரசு என்ஜினீயரிங் கல்லூரி அருகே வசித்து வரும் கோவில் பணியாளர் வீரபாகு(வயது 63) என்பவர் சர்க்கரை பொங்கல் தயாரிக்க அந்த மண்டபத்தில் உள்ள சமையல் கூடத்திற்கு வந்தார்.
அப்போது அவர் கியாஸ் அடுப்பில் தீப்பற்ற வைக்க முயன்றார். அதே நேரத்தில் அங்கிருந்த கியாஸ் அடுப்பில் சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீப்பிடித்து பரவியது. உடனே அவர் அலறியடித்தபடி கீழே இறங்கி ஓடி வந்துவிட்டார். இதையடுத்து அந்த மண்டபத்தில் இருந்த சமையல் பொருட்கள், சாமிக்கான அலங்கார ஆபரணங்கள், உடைகள் தீப்பற்றி எரிந்தன.
இது குறித்து தகவல் கிடைத்ததும், ஓமலூர் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். கியாஸ் சிலிண்டர் இணைப்பை அவர்கள் உடனடியாக துண்டித்து எடுத்து விட்டதால், அந்த கியாஸ் சிலிண்டர் வெடிக்கவில்லை. இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இருப்பினும் மண்டபத்தில் இருந்த சாமி ஆபரணங்கள், உடைகள், பூஜை மற்றும் சமையல் பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளது.
Related Tags :
Next Story