கிருஷ்ணகிரியில் போலீசாருக்கு தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி
கிருஷ்ணகிரியில் போலீசாருக்கு தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி,
இந்திய தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, நாடாளுமன்ற தேர்தலையொட்டி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போலீசாருக்கு தேர்தல் பணிகள் குறித்த பயிற்சி வகுப்பு நடந்தது. இதற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி இந்திய தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் டாக்டர் எஸ்.பிரபாகர், போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ராம்ராவ் போன்ஸ்லே பேசியதாவது:- அரசியல் கட்சியினர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் உரிய அனுமதி பெற்ற வாகனங்களில் மட்டும் பிரசாரம் செய்கிறார்களா என கண்காணிக்க வேண்டும். பிரசாரத்தில் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அனுமதி ஆணையை வாகனத்தில் முன் பகுதியில் ஒட்ட வேண்டும். பணம், பரிசு பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்குவதை காவல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களையும், கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவல் துறையினர் கட்டாயம் தபால் மூலம் வாக்களிக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் தேர்தலை அசம்பாவிதம் நடக்காத வகையிலும், அமைதியான முறையில் நடத்தவும், காவல்துறை மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத்தொகுதி தேர்தல் மற்றும் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள், வேட்பாளர்களின் வாகன அனுமதிகள், வேட்பாளர்கள் கூட்டம் நடத்த அனுமதி அளித்தலில் உள்ள தேர்தல் விதிகள், வாக்குப்பதிவு தினத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள், அசம்பாவிதங்களின்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள், அது தொடர்பான இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள், மக்கள் பிரதிநிதித்துவ சட்ட பிரிவுகள் குறித்து விளக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமமூர்த்தி, தேர்தல் தாசில்தார் ராமச்சந்திரன், தாசில்தார் பிரதாப், துணை தாசில்தார் பாலகிருஷ்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கர் (கிருஷ்ணகிரி), மீனாட்சி (ஓசூர்), ராஜேந்திரன் (பர்கூர்), சங்கீதா (தேன்கனிக்கோட்டை), ராஜபாண்டி (ஊத்தங்கரை) மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story